தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: வாக்குக் கணிப்பில் தகவல்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு ஊடகங்கள் நடத்திய வாக்குக் கணிப்புகளும் “ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்’ என்று தெரிவித்துள்ளன.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதனிடையே, இந்தத் தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீதான வாக்கெடுப்பு என பரவலாகக் கருதப்பட்டது. எனினும், இதனை பாஜகவினர் திட்டவட்டமாக மறுத்தனர்.

இந்நிலையில், தில்லியில் உள்ள பல்வேறு ஊடகங்கள் சார்பில் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் சனிக்கிழமை பிற்பகலில் நடத்தப்பட்டன. அவற்றின் முடிவுகள் மாலை 6 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டன.

இந்த வாக்குக் கணிப்புகளில் பெரும்பாலானவை, தில்லித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளன. இரண்டாமிடத்தில் பாஜகவும், மூன்றாமிடத்தில் காங்கிரஸூம் இருப்பதாக வாக்குக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே பத்திரிகை-சிசரோ அமைப்பு நடத்திய வாக்குக் கணிப்பில், 35 முதல் 43 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 23 முதல் 29 தொகுதிகளில் பாஜகவும், 5-க்கும் குறைவான தொகுதிகளில் காங்கிரஸூம் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏபிபி-நீல்ஸன் அமைப்பு நடத்திய வாக்குக் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சி 39 தொகுதிகளிலும், பாஜக 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், ஜீ தொலைக்காட்சி-“சி வோட்டர்’ அமைப்பு நடத்திய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி, ஆம் ஆத்மிக்கு 31 முதல் 39 தொகுதிகளிலும், பாஜகவுக்கு 27 முதல் 35 தொகுதிகளிலும், காங்கிரஸூக்கு 2 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் எனத் தெரியவருகிறது.

இதனிடையே, “இந்தியா நியூஸ்-ஆக்சிஸ் போல்’ அமைப்பு நடத்திய வாக்குக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகபட்சமாக 53 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜகவுக்கு 17 தொகுதிகளிலும், காங்கிரஸூக்கு 2-க்கும் குறைவான இடங்களிலும் வெற்றி கிட்டும் என அந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

“நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா’ நடத்திய வாக்குக் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சிக்கு 48 தொகுதிளிலும், பாஜகவுக்கு 22 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸூக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என இந்த வாக்குக் கணிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளை “டுடேஸ் சாணக்யா’ அமைப்பு மிகத் துல்லியமாகக் கணித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: