சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தின்போது போலீஸாரைத் தாக்கியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள சிங்கப்பூர் அரசு, அந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதில்லை எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சட்டத் துறை அமைச்சர் கே. சண்முகம் சனிக்கிழமை கூறியதாவது:
நாட்டில் மதக் கலவரங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1964-ஆம் ஆண்டிலேயே மத ஊர்வலங்களுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது பலருக்குத் தெரியாது.
எனினும், ஹிந்துக்களுக்கு மட்டும் அந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தைப்பூசம், பங்குனி உத்திரம், தீமிதி ஆகிய விழாக்களுக்காக ஆண்டுக்கு மூன்று முறை ஊர்வலம் நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் ஊர்வலம் நடத்த ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போல, வேறு எந்த மதத்தினருக்கும் சலுகை வழங்கப்படவில்லை.
மிக மிக அரிதாக, அதுவும் கடுமையான கெடுபிடிகளுக்கு இடையில் பிற மதத்தினரின் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச ஊர்வலத்தின்போது போலீஸார் தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் போலீஸாரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார் அவர்.
ஊர்வலத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், போலீஸாரைத் தாக்கியதாகவும் ராமசந்திர சந்திரமோகன் (32), ஜெயகுமார் கிருஷ்ணமூர்த்தி (28), குணசேகரன் ராஜேந்திரன் (33) ஆகிய 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஹிந்து அறக்கட்டளை வாரியம், ஊர்வலத்தின்போது மேளம் வாசிக்கக் கூடாது என தடை விதித்திருந்தது.
எனினும் அதைப் பொருள்படுத்தாமல் இந்த மூவரும் மேளம் வாசித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-http://www.dinamani.com
மேளம் வாசிப்பதில் என்ன தப்பு இருக்கு ,மேளம் தமிழ் கலாசாரத்தை சேர்ந்தது ல்லவா ??இந்த மூவரும் செய்தது சரியே
அட கிறுக்கு பேர்வழிகளா, மேள தளம் இல்லாத ஊர்வலமா? இது என்ன அரசியல் ஊர்வலமா, அல்லது சமய வழிபாட்டிற்கான ஊர்வலமா? அரசாங்கமும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்கள். மற்ற இனத்தவர்களுக்கோ அல்லது மற்ற மதங்களுக்கோ இடைஞ்சலாக இருக்குமென்றால் அதன் பெயர் ஜனநாயகமா? பாவம் அந்த காவல் துறையினர், சட்டத்தை காப்பாற்ற தங்கள் கடைமையை செய்யப்போய் பிரச்சனைக்குள்ளாகி விட்டனர். இரண்டு தலைமுறையினர் (50 ஆண்டுகள்) தாண்டி விட்டும் இன்னும் அந்த சட்டத்தை மறு ஆய்வு செய்யாமல் வைத்திருக்கிறார்களே, அருமையான நாடாளுமன்றம், அருமையான அரசாங்கம்! எங்களின் பாராட்டுக்கள்.