சகாயம் கேட்கும் 19 கேள்விகள் : உரிய பதில் தர மறுக்கும் கிரானைட் நிறுவனங்களின் நிர்வாகிகள்

sagayamசென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, ஐஏஎஸ் அதிகாரி சகாயம், டிச. 3 முதல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராமங்களில் கிரானைட்  முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். அவர் தனது ஏழாம் கட்ட விசாரணையை நேற்று முன்தினம் தொடங்கினார்.

இரண்டாம் நாளான நேற்று சிந்து  கிரானைட், லட்சுமி எக்ஸ்போர்ட்ஸ், பிஆர்பி மகன் செந்தில்குமார், மைத்துனர் முருகேசன், பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் உரிமதாரர்கள் நேரில்  ஆஜராகி வாக்குமூலம் தரும்படி சகாயம் சம்மன் அனுப்பியிருந்தார். கிரானைட் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்கள் வாக்குமூலத்தை மனுவாக  சகாயத்திடம் அளித்தனர்.

அதில் கிரானைட்  முறைகேடு தொடர்பாக அரசு போட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது பதிலளிக்க இயலாது என  தெரிவித்திருந்தனர். அவர்களின் வாக்குமூலத்தை சகாயம் பதிவு செய்து கொண்டார். சகாயம் முன்பு கிரானைட் குவாரி உரிமதாரர்கள் யாரும் ஆஜராகவில்லை.  அவர்கள் சார்பில் வக்கீல்கள் மட்டுமே ஆஜரானார்கள். அவர்களும் சரியான பதிலை தர மறுத்துவிட்டனர்.

இன்று 3வது நாளாக மூன்று கிரானைட்ஸ்   நிறுவனங்களின் நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணையின் போது கிரானைட் குவாரி குத்தகை தொடர்பாக 19 கேள்விகள் அடங்கிய பட்டியலை குவாரி உரிமதாரர்களுக்கு சகாயம் கொடுத்தார். அந்த  பட்டியலில் பெயர், முகவரி, நிறுவனத்தின் பெயர், குவாரி உள்ள கிராமம், சர்வே எண், மொத்த பரப்பு, அனுமதிக்கப்பட்ட இடம் தவிர பிற இடங்களில் கனிம  வளம் எடுக்கப்பட்டுள்ளனவா, ஆம் எனில் பரப்பு எவ்வளவு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?

அதன் தொகை, அரசு புறம்போக்கில் கிரானைட் வெட்டப்பட்டதா, அதன் விவரம், கழிவுகளை பிற பட்டா நிலம், நீர்நிலை, புறம்போக்கில் கொட்ட அனுமதி  பெறப்பட்டதா, ஏதேனும் வழக்கு உள்ளதா, கனிமம் எடுத்ததில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா உள்பட 19 கேள்விகள் இருந்தன.  இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் எந்த பதிலையும் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது.

-http://www.nakkheeran.in

TAGS: