டெல்லி : டெல்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய கட்டண வசதி வரும் மார்ச் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, இலவச தண்ணீர் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால், 49 நாட்களிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட, அந்தத் திட்டமும் நிறுத்தி வைக்கப் பட்டது.
சொன்னதைச் செய்த கெஜ்ரிவால்… மின் மற்றும் தண்ணீர் கட்டணத்தைக் குறைத்து உத்தரவு இந்நிலையில், தற்போது டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்சார கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள அக்கட்சி மின்சார கட்டணத்தைக் குறைத்துள்ளது. இந்த அறிவிப்பை துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா வெளியிட்டார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இலவச தண்ணீருக்கு மேல் அதிகமாக பெறும் தண்ணீருக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தப் புதிய திட்டங்கள் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 90 சதவீத டெல்லி வாசிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.