இந்திய கடல் எல்லையைத் தாண்டினால் படகு முடக்கம்: காரைக்கால் மீனவ பஞ்சாயத்தில் தீர்மானம்

indian_fishersஇந்திய கடலில் எல்லையை தாண்டும் படகு முடக்கப்படும், படகின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுமென காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறைபிடித்தனர்.

அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை, தமிழக, புதுச்சேரி மீனவர்கள் பேச்சுவார்த்தை 2 கட்டங்களாக நடத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. 3-ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும். எல்லை தாண்டியது தெரிய வந்தால், அந்த படகு ஒரு மாதம் முடக்கப்படும். படகின் உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-http://www.dinamani.com

TAGS: