கிரானைட் குவாரிகளில் நரபலி: மருத்துவதுறை அறிக்கை அளிக்க சகாயம் உத்தரவு

sagayamமதுரை: கிரானைட் குவாரிகளில் பணியாற்றியபோது உயிரிழந்தவர்கள் விவரம் குறித்த அறிக்கையை மருத்துவத் துறை அளிக்கவேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சகாயம் விசாரணை மேற்கொண்டுள்ளார். வரும் மார்ச் 15-ம் தேதி விசாரணைக் காலம் முடிவதால், அதற்குள் தாக்கல் செய்வதற்காக இடைக்கால அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

காவல்துறை வருமானவரி, மாசுக்கட்டுப்பாடு, வணிகவரி, துறைமுக பொறுப்புக்கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஏராளமான விவரங்கள் கேட்டு சகாயம் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த விவரங்களை பெரும்பாலான துறைகள் தாக்கல் செய்துவிட்டன. வழக்கு விவரங்கள் குறித்து காவல்துறையினரும், ஏற்றுமதி செய்யப்பட்ட கிரானைட் கற்கள் குறித்த விவரங்களை சென்னை துறைமுகக் கழகமும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

நரபலிக்கு யார் பலி? கிரானைட் குவாரிகள் செயல்பட்டபோது நரபலி, கொலை என பல சம்பவங்கள் நடந்ததாகவும், சிலரைக் காணவில்லை என்றும் ஏராளமான புகார்கள் சகாயத்துக்கு வந்தன. ஒடிசா, பிஹார், ஆந்திரா மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தலித் சமூகத்தினரை மூட நம்பிக்கையின் அடிப்படையில் நரபலி கொடுத்தனர். இதற்கு தொழிலாளர்களை அழைத்துவரும் ஏஜெண்டுகள் உடந்தையாக செயல்பட்டனர். விபத்தில் இறந்து விட்டதாகக் கூறி உடலை கொடுத்தனுப்பினர் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கீழவளவு அருகே கம்பர்மலைப்பட்டியைச் சேர்ந்த சேவற்கொடியோன் சகாயத்திடம் புகார் அளித்தார்.

மனநலம் பாதித்த நபர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சாப்பாடு கொடுத்து அழைத்து வருவர். புதிய கிரேன், பொக்லைன், குவாரிகள் செயல்படும்போது கேரளத்திலிருந்து மந்திரவாதிகளை அழைத்துவந்து மனநலம் பாதித் தவர்களை நரபலி கொடுப்பர். நான் புதுக்கோட்டை பிஆர்பி குவாரியிலிருந்து வரும்போது மேலாளர் அய்யப்பன் என்பவர் மனநலம் பாதித்த 2 பேரை நான் ஓட்டிவந்த காரில் ஏற்றிவந்து நரபலி கொடுத்தார்.

கரூர், தூத்துக்குடி கரூர் மாவட்டம் தோகைமலையில் இருந்து அனுமந்தன் என்பவர் மனநலம் பாதித்த 2 பேரை நான் ஓட்டிவந்த ஜீப்பில் ஏற்றி வந்து நரபலி கொடுத்தனர். அடுத்த 2 நாளில் தூத்துக்குடியிலிருந்து மனநலம் பாதித்த ஒருவரை அனுமந்தன் அழைத்துவந்தார். அவரும் நரபலி கொடுக்கப்பட்டார். மற்றொரு மேலாளர் ஜோதிபாசு புதுக்கோட்டை பகுதியிலிருந்து ஒரு மனநலம் பாதித்தவரை அழைத்துவந்து அன்னவாசல் குவாரியில் இருந்த முருகேசனிடம் காண்பித்தார். கீழவளவு கல்லுதின்னி சேகர் என்பவர் மனநலம் பாதித்த ஒருவரை அழைத்து வந்து ஜோதிபாசுவிடம் ஒப்படைத்தார். இப்படி பலர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர் என்று புகார் அளித்தார்.

சிறுமி நரபலி குவாரியில் சிறுமி ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டார். இதில் அதிகாரிகள் தூண்டுதலில் என்மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு பதிந்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று புதுதாமரைப்பட்டியை சேர்ந்த ரவி புகார் அளித்தார். இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க சகாயம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அறிக்கை தாக்கல் குவாரிகளில் நடந்த விபத்து உள்ளிட்ட சம்பவம் தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யும்படி மேலூர் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இவற்றை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சேகரித்து வருகிறார். இதில் கிடைக்கும் தகவல்களை இடைக்கால அறிக்கையில் குறிப்பிட சகாயம் திட்டமிட்டுள்ளார்.

தனிப்படை அமைப்பு சகாயம் கேட்ட விவரங்களை சேகரிக்க காவல்துறையில் தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி நியமித்துள்ளார். இந்த குழுவின் அறிக்கையும் இன்னும் சகாயத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. இடைக்கால அறிக்கை தயாரிப்பில் தீவிரம் காட்டிவரும் சகாயம் காவல், மருத்துவத் துறை அறிக்கையை எதிர்பார்த்துள்ளார். இந்த அறிக்கைகள் கிடைத்த பின்னர் சகாயம் தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.oneindia.com

TAGS: