நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, சிறையில் இருந்து வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.
பெண் ஒருவரை கடந்த மாதம் 23-ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அந்த நபர் கைது செய்யப்பட்டு திமாப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்து திமாப்பூரில் பொதுமக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மாணவர்கள் சிலரும், பொதுமக்கள் சிலரும் சிறை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அந்தக் கைதியை வெளியே இழுத்து வந்தனர்.
பின்னர், அவரது ஆடைகளை களைந்துவிட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் உயிரிழந்தார்.
“புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றோம், ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை’ என காவல் துறையினர் கூறினர்.
மாநில அரசு கண்டனம்: இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக மாநில அமைச்சரவை அவசர அவசரமாகக் கூடியது. பின்னர் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சட்டத்தை ஒருக் கூட்டம் தமது கையில் எடுத்துக் கொண்டு கைதியை அடித்துக் கொன்ற விவகாரத்தை அமைச்சரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
இது குறித்து உயர் நிலைக் குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலவரத்தைத் தூண்டிய தனிநபர் அல்லது கூட்டம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்துவதில் அரசு ஊழியர்கள் கடமை தவறினார்களா என்பது குறித்தும் அந்தக் குழு விசாரணை நடத்தும் என நாகாலாந்து அரசு தெரிவித்துள்ளது.
-http://www.dinamani.com
சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு தான். அதே சமயத்தில் தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் தானே அவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தார்கள். உயர்நிலைக் குழு என்பதெல்லாம் அப்போதே வந்திருக்க வேண்டும்!