விவசாயிகளுக்கு நான் எதிரி அல்ல: பிரதமர் மோடி

  • மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகானுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி. உடன் மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

    மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüகானுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி. உடன் மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் விவசாயிகள் நலனுக்கு எதிரானது அல்ல; அதேபோல், நான் விவசாயிகளுக்கு எதிரியும் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வா பகுதியில் 660 மெகா வாட் திறன் கொண்ட இரு அனல் மின் அலகுகளை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மோடி பேசியதாவது: இந்தியாவில் 20 சதவீதம் பேருக்கு இன்னமும் மின்சாரம் கிடைக்கவில்லை. மின்வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பது, மக்களை கற்காலத்தில் தள்ளுவதற்கு சமமாகும்.

மின்சாரம் என்பது உங்கள் வீட்டை மட்டும் வெளிச்சமாக்கும் விஷயமல்ல. அது உங்கள் வாழ்க்கையை வெளிச்சமாக்குகிறது. உங்கள் கனவுகளைப் பிரகாசிக்கச் செய்கிறது. மின்சாரமின்றி நம் எதிர்காலக் கனவுகளை நனவாக்க முடியாது. எனவே, அடுத்த தலைமுறைக்காகவும், நமது குழந்தைகளுக்காகவும் மின்சாரத்தை நாம் சேமிக்க வேண்டும்.

மக்கள் நலனுக்கான பட்ஜெட்: அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், ஏழைகள், பழங்குடியினர், தலித் இன மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

நிலம் கையகச் சட்டம்: ஏழை மக்களுக்கு சாலை வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், பாசனத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் ஏழை மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு வகை செய்யும் எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை.

அந்தத் திட்டங்களுக்கு நிலங்களை ஒதுக்கித் தரவும் காங்கிரஸ் அரசு மறுத்து விட்டது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் விவசாயிகளுக்கு தண்ணீர், பாசன வசதிகளும் கிடைக்கவில்லை.

அந்த வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவே நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நான் விவசாயிகளுக்கு எதிரி அல்ல. விவசாயிகள் நலனுக்கு எதிராக மத்திய அரசு ஒருபோதும் செயல்படாது.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: நிலம் கையகச் சட்டத் திருத்தத்தில் விவசாயிகளுக்கு எதிரான ஷரத்துகள் இருந்தால், எதிர்க்கட்சிகள் எங்களிடம் தெரிவிக்கலாம். அதனைத் திருத்திக் கொள்ள அரசு தயாராக இருக்கிறது. ஆனால், அதனைத் தெரிவிக்கவும் அவர்கள் மறுக்கிறார்கள்.

மாநிலங்களவையில் எங்கள் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. எனவே, உங்கள் (எதிர்கட்சிகள்) ஒத்துழைப்பின்றி அரசால் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர முடியாது. உங்கள் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்காதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நிலக்கரிச் சுரங்கம்: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தால் ஒதுக்கீட்டு உரிமம் ரத்து செய்யப்பட்ட 204 சுரங்கங்களில் 19 சுரங்கங்களுக்கு அண்மையில் இணையவழி ஏலம் நடத்தப்பட்டது. அந்த 19 சுரங்கங்களை வெளிப்படையாக ஒதுக்கீடு செய்தததன் மூலம் அரசுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதன் மூலம், சுரங்கங்கள் அமைந்துள்ள மாநிலங்களுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். உதாரணமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள 4 நிலக்கரிச் சுரங்கங்களை இணையவழி ஏலத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்ததன் மூலம் அந்த மாநிலத்துக்கு ரூ.40,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மோடி தெரிவித்தார்.

புதிய மின்திட்டங்கள்: 4,000 மெகா வாட் திறன் கொண்ட புதிய மின் உற்பத்தி நிலையங்களை 5 இடங்களில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இதுகுறித்து பியூஷ் கோயல் பேசியதாவது: அதிக உற்பத்தி திறன் கொண்ட புதிய மின் நிலையங்களை 5 இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே 4,000 மெகா வாட் திறன் கொண்ட முதல் மின் நிலையம் மத்தியப் பிரதேசத்தில் அமையவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-http://www.dinamani.com

TAGS: