இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவினால் அவர்களை சுடுவோம் என கூறிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சினையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இத்தாலி கடற்படை வீரர் பிரச்சினையுடன் இதை ஒப்பிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் ஏன் வருகின்றனர். இந்திய மீனவர்கள், இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கட்டும். ஒருவர் என் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றால், நான் அவரை சுடலாம். சட்டம் அதை அனுமதிக்கிறது. நாங்கள் உங்கள் மீனவர்கள் மீது பெருந்தன்மை காட்ட வேண்டும் என்றால், நீங்கள் அதே பெருந்தன்மையை இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மீது காட்டியிருக்க வேண்டும் இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு செயலர் அக்பருதீன் கூறியதாவது,
இலங்கை பிரதமரிடம் இந்திய மீனவர் பிரச்சினையை மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்றும், இது, அவர்களின் வாழ்வாதார பிரச்சினை என்றும் அமைச்சர் சுஷ்மா கூறினார்.
மேலும், இத்தாலி கடற்படை வீரர் பிரச்சினையுடன், இந்திய மீனவர் பிரச்னையை ஒப்பிடக் கூடாது என்றும், இந்த இரண்டு பிரச்சினைகளும் வெவ்வேறு விதமானவை என்றும், அவரிடம் விளக்கினார்.
மீனவர் பிரச்சினையில் உள்ள சிக்கல்களையும், கருத்து வேறுபாடுகளையும் பேச்சுவார்த்தை மூலமே சுமுகமாக தீர்க்க முடியும் என்றும் சுஷ்மா வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும், 13 மற்றும் 14ம் திகதிகளில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மோடியின் இந்த சுற்றுப் பயணம், இலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-http://www.tamilwin.com