ஆம்பளைகளை ‘வரதட்சணை கேஸில்’ மாட்டிவிட்டு ஹாயா இருக்க நினைக்கும் பெண்களே.. இதை படிங்கம்மா…

indian_womenடெல்லி: வரதட்சணை கொடுமையை சமரசத்துக்குள்பட்ட குற்றமாக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில், கணவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண் அல்லது அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் அளித்தால், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்படுவதில்லை. இருதரப்பினரும் சமரசம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படவில்லை. இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமிழைக்காதவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவர். அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக இந்த சட்டத்தை பெண்கள், தங்களது கணவர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம், நீதிபதி மாலிமாத் குழு ஆகியவை மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளித்துள்ளன. அந்தப் பரிந்துரைகளின்படி, நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் புகார்தாரரும், குற்றம்சாட்டப்பட்டவரும் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அதை சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய தண்டனைவியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 498ஏ பிரிவை, சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் வரைவு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் தயாரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சட்டத்தில், பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இந்தத் தொகையை ரூ.15,000 ஆக அதிகரிக்கும் வகையில் அரசு திருத்தம் செய்ய இருக்கிறது. அத்துடன், தண்டனை விதிக்கப்படுபவர்கள் இழப்பீடு வழங்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வரதட்சணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய சட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கிறது. இதுவே தொடர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது மனித உரிமை மீறலாகும். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. மத்திய அரசின் முடிவை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 1980ஆம் ஆண்டு காலகட்டத்தில், வரதட்சணை கொடுமை காரணமாக தொடர்ந்து புது மணப்பெண்கள் உயிரிழந்ததை அடுத்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தில் 498ஏ பிரிவு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS: