வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் நடந்த சர்வதேச எரிசக்தி குறித்த மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர்,
வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைகள் பயன்பெற முடியும். மானியத்தை கைவிடுவதால் கிடைக்கும் தொகை ஏழைகளுக்கு செலவிட முடியும். 2.8 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை கைவிட்டதால் ரூபாய் 100 கோடி மீதமாகியுள்ளது. நேரடி மானியத் திட்டத்தின் பயன்கள் முழுமையாகச் சென்றடைய வேண்டும்.
எரிசக்தி தேவையில் தன்னிறைவு அடைவது வளர்ச்சிக்கு அவசியம். 77 சதிவிகித எரிவாயு தேவை இறக்குமதி மூலம் நிறைவேற்றப்படுகிறது. ஒரு கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குழாய் மூலம் குடிநீர் வழங்குவது போல், எரிவாயு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.