ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துபவர் தான் நுகர்வோர். அப்படி எனில் வாடிக்கையாளர் யார் என்ற கேள்வி எழும். ஒரே பொருளை அல்லது சேவையை தொடர்ச்சியாக வாங்குபவர் வாடிக்கையாளர்.
நுகர்வோர் உரிமையை வலியுறுத்தும் வகையில் நுகர்வோர் நாள் கொண்டாடப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் வியாபார யுக்திகளால் இங்கு நுகர்வோர் ஏமாற்றப்படுவதாக தகவல்கள் உண்டு.
மற்றொரு புறம் ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை கலப்பது, தரம் அதிகமான பொருளுடன் தரம் குன்றிய பொருட்களை கலப்பது, எடை குறைப்பு மற்றும் விலை அதிகரிப்பு என நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான வழிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஏமாற்றப்படும் வழிகள்
ஒரு பொருளை பற்றி மிகைப்படுத்தி, சாத்தியம் இல்லாத செயலை கூட சம்பந்தப்படுத்தி விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றம். எடை குறைப்பு இன்று மிக அதிகரித்து காணப்படுகிறது. பிளாட்பார கடைகள் முதல் டிபார்ட்மென்டல் ஸ்டோர் வரை இது சகஜம். நுகர்வோரும் எடையை கவனிப்பதில்லை. எல்லா பொருட்களும் ‘பாக்கெட்’ செய்யப்பட்டு இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
விலை அதிகரிப்பது மற்றொரு வழி. எக்காரணம் கொண்டும் ‘எம்.ஆர்.பி.,’ எனப்படும் அதிகபட்ச சந்தை விலையை தாண்டி பொருட்களை விற்க கூடாது. ஆனாலும் ஒரு சில இடங்களில் விற்கப்படுகிறது. தியேட்டர்களில் புதிய சினிமா திரையிடும் நாட்களில் கூடுதல் கட்டணம் சர்வ சாதாரணமாக வசூலிக்கப்படுகிறது. பொருளை ‘ஆன்லைனில்’ வாங்கும் போது அதை மாற்றி கொடுக்கப்படுகிறது.ஏமாற்றும் வழிகளில் கலப்படம் மிக முக்கியமானது. கலப்படம் மூன்று வழிகளில் நடக்கிறது. முதலில் ஒரு பொருளுடன் இன்னொரு பொருளை சேர்ப்பது; அரிசியுடன் அதே நிறத்தில் உள்ள கல்லை சேர்ப்பதாகும். தரம் அதிகமாக பொருளுடன் தரம் குறைந்த பொருளை கலப்பது இரண்டாவது ரகம். மூன்றாவதாக விற்பனைக்காக பொருளுடன் ஒரு சில ரசாயனத்தை கலப்பது, உதாரணமாக ஆப்பிளுடன் ‘வாஸ்லின்’ சேர்த்து மெருகூட்டுவது. தர்ப்பூசணி ஜூசுடன் கேசரி பவுடர் கலந்து நிறம் கூட்டுவது. இப்படி பல விதங்களில் நுகர்வோர் ஏமாற்றப்படுவது மட்டுமல்ல… அவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
நுகர்வோர் உரிமை
ஏமாற்றப்படுவதில் இருந்து தப்பிக்க நுகர்வோர் தங்களின் உரிமைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கலப்படம், ரசாயன பொருட்கள் சேர்ப்பு இவற்றில் இருந்து உடலுக்கோ, உயிருக்கோ பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் உரிமை உள்ளது. பாதிப்பு ஏற்பட்டால் வழக்கு தொடரவும், இழப்பீடு கோரவும் உரிமை உண்டு.
தான் வாங்கும் பொருட்களின் தரம், விலை, அளவு, பொருளின் தூய்மை, பயன்படுத்தும் முறை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. விற்பனையாளரும் அதை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். தனக்கு தேவையான பொருளை தனக்கு பிடித்த நிறத்தில், பிடித்த வடிவத்தில் வாங்கும் உரிமை உள்ளது. நுகர்வோர் தன் விருப்பு வெறுப்புகளை தெரிவிக்கும் உரிமையும் உள்ளது.
பாதுகாப்பு சட்டம் 1986
நுகர்வோரையும், நுகர்வோர் உரிமையையும் பாதுகாக்கும் பொருட்டு 1986ல் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது. பாதிக்கப்படும் நுகர்வோர் இச்சட்டத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம். இதற்காக நுகர்வோர் கோர்ட் மூன்றடுக்குகளாக செயல்படுகின்றன.மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் ஆணையம் என செயல்படுகின்றன.
நாட்டில் 621 மாவட்ட, 35 மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் டில்லியில் தேசிய நுகர்வோர் ஆணையம் உள்ளன. மாவட்ட கோர்ட்களில் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு கோரியும்; மாநில ஆணையத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரையும்; அதற்கு மேல் தேசிய ஆணையத்திடமும் கோரலாம்.
யார் மீது வழக்கு தொடரலாம் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்குள் வழக்கு தொடர வேண்டும். தாமதமாக தொடரப்படும் வழக்குகளுக்கு தகுந்த காரணம் தெரிவித்தால் மட்டுமே அவை ஏற்கப்படும். நமக்கு பொருளை விற்பனை செய்யும் அனைவர் மீதும் வழக்கு தொடர முடியும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. உதாரணமாக மளிகை கடை, ‘டிபார்ட்மென்டல் ஸ்டோர்’ என வழக்கு தொடரலாம்.
நாம் ஒரு கடைக்கு சென்று ஒரு பொருளை விலைக்கு வாங்குகிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக பணம் வாங்கினாலோ, எடை குறைவாக இருந்தாலோ, அதன் தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக கடைக்காரர்களிடம் சுட்டிகாட்டுங்கள்.
அவர் தவறை சரி செய்ய மறுத்தால், வழக்கு தொடரப்படும் என ‘நோட்டீஸ்’ அனுப்புங்கள். பொருள் வாங்கிய ரசீதை வைத்து கொள்ளுங்கள். எடை குறைவு எனில் அதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அவற்றை வைத்து கோர்ட்டில் வழக்கறிஞர் மூலமாகவோ, நுகர்வோரே நேரடியாக வழக்கு தொடரலாம்.சட்டங்களும், அமைப்புகளும் இருந்தாலும் நுகர்வோர் விழிப்புடன் கவனமாக இருந்தால் மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
-http://www.dinamalar.com