போபால், மார்ச் 30- பசுக்களை கொல்வதை நாடு முழுவதும் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், அரியானா, ஜார்க்கண்ட் என்று அக்கட்சி ஆளும் பல மாநிலங்களிலும் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று ஆன்மீகவாதிகளுடனான ஒரு உரையாடலின் போது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பசுக்களை கொல்வதை நாடு முழுவதும் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறுகையில், “இந்தியாவில் பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைத்து, வலிமையையும் பயன்படுத்தி நாங்கள் இதை தடை செய்வோம். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்வோம்” என்றார். மேலும் பசு வதை தடை செய்யப்படும் என்ற பா.ஜ.க. வின் தேர்தல் அறிக்கையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளவில் மாட்டிறைச்சியை பயன்படுத்துவதில் 5-வது இடத்திலும், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 2-வது இடத்திலும் இந்தியா இருக்கும் நிலையிலும், ‘பசு வதை தடை’ தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள பலருக்கு வேலை பறி போகும் அபாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.maalaimalar.com