புதுடில்லி : ரயில்கள் தாமதமாக இயக்குப்படுவதாக பிரதமர் அலுவலகத்திற்கு குவிந்த புகார்களை அடுத்து, ரயில்கள் ஏன் தாமதமாகவே வருவது? எப்போது சரியான நேரத்திற்கு இயக்குவீர்கள்? என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
விளக்கம் கேட்ட மோடி :
ரயில்கள் தாமதமாக வருவதற்கு காரணம் என்ன என அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார். மேலும், எத்தனை ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுகின்றன? எத்தனை ரயில்கள் தாமதமாக இயங்குகின்றன? என கேள்வி கேட்டுள்ளார். எம்.பி.,க்கள், அமைச்சர்கள், பொது மக்களிடம் இருந்து ரயில்கள் தாமதம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகார்களை தொடர்ந்து பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சரவை அழைத்து பேசி உள்ளார். புகார்களும் ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தவறுகளை கண்டறிந்து விரைவில் சரியான நேரத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அமைச்சர் பிரதமரிடம் உறுதி அளித்துள்ளார்.
பழைய அறிக்கை தந்த அதிகாரிகள் :
அதிக அளவிலான புகார்கள் வந்ததை அடுத்து ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பிரதமர் அலுவலகம் அறிக்கை கேட்டது. இதற்கு 90 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்பட்ட பழைய அட்டவணையை ரயில்வே அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக பிரதமர் அலுவலக கண்டித்ததால் ரயில்வே கழக உறுப்பினர் அஜய் சுக்லா, அனைத்து ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பிரதமர் அலுவலகத்திற்கு தவறான தகவல்களை அனுப்பிய அதிகாரிகள் மீது சஸ்பெண்ட், பணியிட மாற்றம் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே துறை தகவல் :
சிக்னல் குளறுபடி, என்ஜின் பழுது உள்ளிட்ட காரணங்களாலேயே ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை 84.43 சதவீதம் வரை சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் அது 79 சதவீதமாக இருந்து, தற்போது 60 சதவீதமாக குறைந்து விட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக பல பகுதிகளில் பனிமூட்டம் அதிகளவில் இருந்ததும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதற்கு ஒரு காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-http://www.dinamalar.com