நடுவர் மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண நீண்ட காலமாவதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவற்றின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
மத்திய சட்டத் துறை சார்பில் சட்டத் துறை எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியிலான பிரச்னைகள், நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நீதித் துறை கட்டமைப்புகளை வலுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டைத் தொடக்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நம் நாட்டு மக்கள் நீதித் துறையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். வருங்காலத்தில் நீதித் துறையைப் பலப்படுத்தும் வகையில், சட்டம் தொடர்பான கல்வி நிலையங்களை அமைப்பது, மனித வள ஆற்றலை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவது அவசியம்.
பிரதமர் அதிருப்தி: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தற்போது “லோக் அதாலத்’ முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அதுபோல, பல வழக்குகளுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் நடுவர்மன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், வழக்குகளுக்குத் தீர்வு காண்பதில் அதிகக் கால அவகாசம் ஆகிறது. இதனால், நடுவர் மன்றங்களில் எண்ணிக்கை நூறை எட்டும் அளவில் உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் கீழே குறைந்தபட்சம் 5 நடுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நடுவர் மன்றங்கள் தாமதமாக நீதி வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டனவா? அல்லது விரைந்து தீர்வு காண ஏற்படுத்தப்பட்டனவா? என்ற கேள்வி எழுகிறது. எனவே, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நடுவர் மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து, உரிய தீர்வு காண முன்வர வேண்டும்.
நீதித் துறையில் தொழில்நுட்ப சேவை: நீதித் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பதினான்காவது நிதிக் குழுவில் ரூ.9,749 கோடியை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியை மாநில அரசுகளும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதவிர, நீதிமன்றங்களின் சேவையின் தரத்தை மேம்படுத்தும் வகையில், “டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதற்கு மத்திய அரசுடன், மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாதாரண மனிதனுக்கும் நீதி எளிதில் கிடைக்கக்கூடிய வழிமுறைகளைக் கண்டறிய இந்த மாநாடு நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார் நரேந்திர மோடி.
முன்னதாக இந்த மாநாட்டில், பங்கேற்றவர்களை மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெüடா வரவேற்றார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். சில மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்றாலும், அந்த மாநிலங்களின் சார்பில் சட்டத் துறை அமைச்சர்கள், செயலர்கள் பங்கேற்றனர். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, அரசுத் தலைமை வழக்குரைஞர்கள், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டு மேடைக்குச் செல்வதற்கு முன்பு, அரங்கில் மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் அமர்ந்திருந்த இடத்துக்கு பிரதமர் மோடி சென்று வணக்கத்தை செலுத்திவிட்டு மேடை ஏறினார்.
சுயமதிப்பீடு அவசியம்
நீதிபதிகள் தங்களைத் தாங்களே சுயமதிப்பீடு செய்து கொள்வது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இந்த மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது:
நம் தகுதிக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் உள்ளன. அதுபோல, இந்திய நீதித் துறைக்கும் மிகப்பெரிய பொறுப்புகள் உள்ளன. ஆனால், அவை கடவுளால் அளிக்கப்பட்ட புனிதமான பொறுப்பு. எங்கள் (அரசியல்வாதிகள்) மீது குற்றச்சாட்டு எழுந்தால் கண்டிக்கவோ, தண்டிக்கவோ நீதிமன்றங்கள் உள்ளன.
ஆனால், நீதி வழங்கும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால் அது நாட்டுக்கே கேடாக அமையும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், அவை நேர்மையான நிலைப்பாட்டுடன் இருப்பது அவசியம். எனவே, நீதிபதிகள் ஒவ்வொருவரும் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வது அவசியம். பொதுமக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் நீதித் துறை, சக்தி வாய்ந்த, திறன் வாய்ந்ததாக விளங்குவதும் அவசியமாகும்.
நம் நாட்டில் சுமார் 1,700-க்கும் மேற்பட்ட சட்டங்கள் தேவையற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை என் காலத்திற்குள் நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தற்போது நவீனத் தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், இணைய வழிக் குற்றங்கள், கடல்சார் குற்றங்கள் தொடர்பான சட்டங்களிலும் நீதித் துறை அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும், நீதித் துறையில் இருப்பவர்கள் தடய அறிவியல் தொடர்பான விவரங்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியம் என்றார் மோடி.
-http://www.dinamani.com