ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

  • ஜெர்மனி நாட்டின் ஹனோவர் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்ற  பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்.

    ஜெர்மனி நாட்டின் ஹனோவர் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்ற  பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்றும், இந்த அங்கீகாரத்தை விரைவாக வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பிரான்ஸ் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ஜெர்மனிக்குப் புறப்படும் முன்பாக, பாரீஸில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

அப்போது, அவர் மேலும் பேசியதாவது:

முதல் உலகப் போரில் இருந்து, ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும், உலக அமைதிக்காக இந்தியா எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளது.

ஐ.நா. அமைதிப் படையில் மிகப்பெரிய பங்களிப்பாளராக இந்தியா உள்ளது.

எனினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் ஏக்கம், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலக அமைதிக்காக, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு உலக நாடுகள் மதிப்பளிக்க வேண்டிய நேரம் இது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது இந்தியாவின் உரிமையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அஹிம்சை, அன்பு ஆகியவற்றை போதித்த மகாத்மா காந்தி, கெளதம புத்தர் ஆகிய மகான்களை, இந்தியாவைப் போன்று வேறு எந்த நாடும் பெற்றிருக்கவில்லை.

ஐ.நா. சபை, தனது 70-ஆவது ஆண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இதுகுறித்து சிந்திக்க வேண்டும்.

தற்போதைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சமகால யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கவில்லை.

எனவே, விரிவாக்கம் செய்யப்படவுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும்.

முதல் உலகப் போரில், பிரான்ஸூக்கு ஆதரவாக 14 லட்சம் இந்தியர்கள் பங்கேற்றனர். அந்தப் போரில் வீரமரணம் அடைந்த 10,000 இந்தியர்களுக்காக, பிரான்ஸ் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, உலக அமைதிக்காக இந்தியர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருந்து வருகின்றனர். இதை உலக நாடுகள் உணர வேண்டும்.

இந்தியாவின் பல ஆண்டு கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இந்தியா ஒருபோதும் யாருக்கும் தீங்கிழைக்கும் வகையில் செயல்பட்டதில்லை என்ற உண்மை தெரியவரும்.

சில நேரங்களில் வரலாறு மறக்கப்படுகிறது. யார் ஒருவர் வரலாற்றை மறக்கிறார்களோ, அவர்கள் தங்கள் உரிமையையும் இழப்பார்கள் என்றார் மோடி.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விரைவில் சீர்திருத்தம் செய்து, அதில் தங்களுக்கும் நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்று இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

“வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல்’

இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் இணைந்து, ஹனோவரில் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகக் கண்காட்சியை மோடி தொடக்கி வைத்தார். அதில், மோடி பேசியதாவது:

அடிக்கடி விதிகள் மாற்றமடையாத, நிலையான சூழலை இந்தியாவில் ஏற்படுத்தி வருகிறோம். முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் வெளிப்படையான சூழலை உருவாக்கியுள்ளோம்.

“இந்தியாவில் தயாரிப்போம்’ என்பது கோஷமோ அல்லது குறியீடோ அல்ல. அது புதிய தேசிய இயக்கமாகும்.

ஜெர்மனி எங்களின் மதிக்கத்தக்க கூட்டாளியாகும். ஆழமாகவும், விரிவாகவும் வளரக்கூடிய நெருக்கமான உறவை இரு நாடுகளும் கொண்டுள்ளன.

இந்தியாவுடனான வர்த்தகம், முதலீட்டு ரீதியான உறவுகளை மேம்படுத்த உலக நாடுகளிடையே புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகத்தையும் வரவேற்க இந்தியா தயாராக உள்ளது.

நட்புறவுச் செய்தியும், ஒத்துழைப்பு உறுதியும் கொண்ட புதிய இந்தியாவின் சின்னமாக “இந்தியாவில் தயாரிப்போம்’ குறியீட்டில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் திகழ்கின்றன என்றார் மோடி.

மோடியை வரவேற்று மெர்கெல் பேசுகையில், “இந்தியாவுடனான உறவில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்த ஜெர்மனி தயாராக உள்ளது’ என்றார்.

முன்னதாக, ஜெர்மனியின் ஹனோவர் விமான நிலையத்தில் மோடியை அந்நாட்டு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்றனர்.

பின்னர், ஹனோவர் நகரில், ஜெர்மனியின் 20 முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியாவில் எளிமையான முறையில் தொழில் செய்வதற்காக, மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார். பின்னர், அவர்களை தனித்தனியாகவும் மோடி சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனிருந்தார்.

மாணவர்களுக்கு சலுகை: முன்னதாக, பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி முடித்துக் கொள்வதற்கு முன்பாக, மாணவர்களுக்கு சலுகை அளிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.

இதன்படி, பிரான்ஸில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்களது படிப்பு முடிந்த பிறகும் 24 மாதங்களுக்கு அந்நாட்டில் தங்கியிருக்கலாம். இந்தியாவில் தங்கிப் படிக்கும் பிரான்ஸ் மாணவர்களும் இதேபோன்ற சலுகையை நம் நாட்டில் பெறலாம்.

-http://www.dinamani.com

TAGS: