தூய்மை இந்தியா பிரசாரம் தீண்டாமைக்கு எதிரானது: ராஜ்நாத் சிங்

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற

“பிரதமர் நரேந்திர மோடியின் “தூய்மை இந்தியா’ பிரசாரம், அசுத்தத்துக்கு எதிரானது மட்டுமின்றி, தீண்டாமைக்கும் எதிரானது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

“சுலப்’ தன்னார்வ அமைப்பின் சார்பில், தீண்டாமை ஒழிப்பு நிகழ்ச்சி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தீண்டாமையை ஒழிக்க, இதுவரை நாம் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இருப்பினும், இந்த விஷயத்தில் இன்னும் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தீண்டாமைக்கு எதிரான பிரசாரத்தை மகாத்மா காந்தி ஆரம்பித்தார். பிரதமர் நரேந்திர மோடி, “தூய்மை இந்தியா’ பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த பிரசாரம் அசுத்தத்துக்கு எதிரானது மட்டுமின்றி, தீண்டாமைக்கு எதிரான மோடியின் உறுதியான போராட்டமும் ஆகும்.

ரத்த சம்பந்தம் இல்லாதவர்களையும் நண்பர்களாகவும், குடும்ப உறுப்பினர் போலவும் கருதும் மனப்பான்மையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும் என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

முன்னதாக, பழங்குடியின பெண்களுடன், ராஜ்நாத் சிங் மதிய உணவு அருந்தினார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், “இந்த நிகழ்வு என் வாழ்வின் மறக்க முடியாத தருணமாகும். “உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தவர்’ என்பது நாம் உலகுக்கு சொல்லும் முக்கிய செய்தியாகும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, சுலப் அமைப்பின் நிறுவனர் பிந்தேஸ்வர் பதக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-www.dinamani.com

TAGS: