ஆந்திர போலீஸ் நடத்திய வெறியாட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் டெல்லியில் ஒன்று திரண்டுள்ளனர். ஆந்திர கொலைவெறிச் சம்பவத்தில் தப்பி வந்த சாட்சிகளை அங்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பைச் சேர்ந்த ஹென்றி டிபேனும், டெல்லியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான விருந்தா குரோவரும்தான் இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஹென்றி டிபேன் இது குறித்து கூறியதாவது,
ஆந்திராவில் நடந்த சம்பவத்தில் தப்பி வந்தவர்கள் நிறைய தகவல்களைச் சாட்சியமாகச் சொல்லியிருக்கிறார்கள். சேகர், பாலச்சந்திரன் என்ற அந்த இருவரும் டெல்லிக்கே வந்து ஆணையத்தின் முன்பு சாட்சியம் அளித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரை கோவை வழியாக டெல்லிக்கு அழைத்து வந்தோம்.
மூன்றாவது நபர் இளங்கோ என்பவரும் தப்பித்து வந்தவர். அவர் தனக்குள்ள ஆபத்தை உணர்ந்து திருவனந்தபுரத்தில் இருந்தார். அவரை அணுகினோம். ஆனால் உடனடியாக விமானத்தில் அழைத்து வர, போதிய ஆவணங்கள் இல்லாததால் அவர், தமிழகத்திலேயே சாட்சியம் அளிப்பார்.
சேஷாசலம் வனப்பகுதி விவகாரத்தை அறிந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், நாங்கள் இப்போது எங்களது விசாரணை மற்றும் இந்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் புகாராகவும் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம்.
ஆஜர்படுத்தப்பட்ட இந்த மூன்று சாட்சிகள் மூலம், சேஷாசலம் வனப்பகுதிக்கு 13 பேர் அழைத்துச் சென்று கொல்லப்பட்டது தெரியவருகிறது. இவர்கள் நேரடி சாட்சிகள். இவர்கள் சொல்வதைக்கூட எடுத்துக்கொள்ள மறுத்தால், பஸ் பயணம், தொலைபேசி கால்கள் எல்லாம் இதற்கு ஆதாரமாக உள்ளன. இதை விரிவாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கும் கடத்தலுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் கூலித்தொழிலாளிகள். இப்படிப்பட்ட கூலிகளுக்குக் கடத்தல் வர்த்தகம் பற்றி தெரியாது. இவர்கள் எல்லோரும் படிக்காதவர்கள். கூலிவேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். கடத்தல் தொழிலே செய்தாலும் அல்லது தீவிரவாதத்திலேயே ஈடுபட்டிருந்தாலும்கூட இவர்களை இப்படி கொலை செய்ய சட்டம் அனுமதிக்கவில்லை.
இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆந்திர அரசும் தமிழக அரசும் இதுவரை யாரையும் பொறுப்பு ஆக்கவில்லை. நாங்கள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையைத் தவிர, உண்மை அறியும் உயர் மட்டக் குழு ஒன்றையும் ஏடுபடுத்தி இருந்தோம்.
இதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹெச்.சுரேஷ், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் சத்ய பால், முன்னாள் சி.ஆர்.பி.எஃப். டி.ஜி.பி ராம்மோகன் கொண்ட இந்தக் குழுவும் ஆந்திராவுக்குச் சென்று விசாரணையை மேற்கொண்டது. அதிரடிப்படை டி.ஐ.ஜி காந்தா ராவோ, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரோ இவர்களிடம் பேச மறுத்துவிட்டனர். திருப்பதி போலீஸ் நிலைய அதிகாரியும் பேச மறுத்துவிட்டார்.
நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மட்டும் இந்தக் குழுவிடம் பேசினார். திருப்பதி வனச் சரக அதிகாரிகளும் இவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டதோடு சம்பவம் நடந்த சேஷாசலம் வனச் சரக பகுதிக்குச் செல்லவும் அனுமதி மறுத்துவிட்டனர்.
இந்தக் குழு ஆரம்பகட்ட அறிக்கையை எங்களிடம் அளித்துள்ளது. இதன்படி, இந்தத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு காட்டுக்கு வெளியே கடுமையான சித்ரவதைக்குப் பின்னர் வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம்.
தர்மபுரியைச் சேர்ந்தவர்கள் கடந்த 5-ம்் தேதி புறப்பட்டு 6-ம் தேதி இரவு வந்துள்ளனர். திருவண்ணாமலைக்காரர்கள் 6-ம் தேதி பிற்பகல்தான் புறப்பட்டு வந்துள்ளனர். இந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 7-ம் தேதி அதிகாலை 4.30 முதல் 5.30-க்குள் காடுகளுக்குள் போய் எப்படி மரத்தை வெட்டியிருக்க முடியும்?
இறந்த 20 பேரில் 13 பேர் தர்மபுரியில் வசிக்கும் மலையாள பழங்குடியின மக்கள். தர்மபுரி மாவட்ட கலெக்டர் இவர்களது உடல்களை மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடாதது மட்டுமல்ல; இவர்களது உடல்களை உடனடியாக அடக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, இந்த உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டு ஈமச் சடங்குகளை முடித்துவிட்டனர். ஆனால், வன்னியர்கள் இனத்தைச் சேர்ந்த ஆறு பேர்களது உடல்கள் மட்டும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சவக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இவர்களில் பலருக்குக் கண் இல்லை, சிலருக்கு நாக்கு பல் எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளன. கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இவர்கள் சித்ரவதை செய்யப்பட்டார்கள் என்பதற்கு உதாரணம்” என்று சொன்னார்.
அதன் பிறகு விருந்தா குரோவர் விளக்கம் அளித்தார். ‘‘நாட்டில் நீதிக்குப் புறம்பாக கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செம்மரக் கட்டைகளை கடத்தும்போது பிடிபட்டதாகவும் அப்போது அதிரடிப்படையினரை இந்தக் கும்பல் கற்களாலும் உருட்டுக்கட்டைகளாலும் தாக்க வந்த நிலையில் தற்காப்புக்குச் சுட்டுக்கொன்றதாகவும் கூறினர்.
ஆனால், பத்திரிகைச் செய்திகளும் புகைப்படங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், இந்த சாட்சியங்கள் மூலம் போலீஸார் கூறுவது முழுப் பொய் எனத் தெரியவருகிறது.
சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆணையத்தின் பதிவாளர்கள், அதிகாரிகள் முன்னிலையில் முதலில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப் பட்டன. பின்னர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூன்று மணி நேரம் இந்த சாட்சிகளிடம் விசாரணையையும் மேற்கொண்டனர்.
இறுதியாக நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக ஆணையம் இந்த சம்பவத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உத்தரவு போட்டது. 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை ஆந்திர போலீஸார் எஃப்.ஐ.ஆரைக்கூட போடவில்லை.
இறுதியாக உயர் நீதிமன்றம் தலையிட்டதால், கடந்த 15-ம் தேதி கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. ஆந்திர போலீஸ் இந்த சாட்சிகளை அழிக்கவும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தினோம். இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டு பல்வேறு உத்தரவுகளைப் போட்டது.
சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஊர் பஞ்சாயத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு தேவை. குற்றவியல் நடைமுறை சட்டப்படி[176(1)ஏ] உடனடியாக ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
இந்த அதிரடிப் படையில் இடம்பெற்ற வனத் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளின் பட்டியல்கள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிமருந்துகள் விவரங்களோடு, அலுவலக தஸ்தாவேஜ்கள், டெய்லி டைரி போன்றவை பறிமுதல் செய்து சீல் வைத்து அனுப்பப்படவேண்டும்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி சில உடல்கள் அடக்கம் செய்யப்படவில்லை. இந்த உடல்களை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளின்படி பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும்.
மூன்றாவது சாட்சியான இளங்கோவிடம் விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரிகளையே நேரடியாகத் தமிழகத்துக்கு அனுப்பி வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
இது ஆந்திர – தமிழ்நாடு பிரச்னை அல்ல. நாடு முழுவதும் உள்ள பிரச்னை. தற்காப்புக்காகச் சுட்டோம் என்கின்றனர். துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது தற்காப்பு அல்ல. ஒவ்வொரு என்கவுன்டர் விவகாரத்தின்போதும் மனித உரிமைகள் ஆணையம் சில வழிகாட்டு முறைகளைச் சொல்லி வருகிறது.
ஆனால், ஈவுஇரக்கமின்றி இப்படிப்பட்ட கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. என்கவுன்டர் என்ற போர்வையில் தன்னிச்சையாகக் கொலைகளை நடத்திவருகின்றனர். இந்தக் குற்றங்களில் ஈடுபடும் போலீஸார்கள் தண்டிக்கபட வேண்டும்’’ என்றார்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
ஆந்திராவில் நடந்த போலி என்கவுன்டர் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்திவிட்டு வந்துள்ளார் ‘எவிடென்ஸ்’ கதிர். அவர் வைக்கும் வாதங்கள்:
‘‘கொல்லப்பட்டவர்கள் முகவரிகள் போலீஸாருக்கு எப்படி கிடைத்தன?”
நக்சல்பாரிகளையும் தீவிர மதக் குழுவினரையும் போலி என்கவுன்டரில் சகட்டுமேனிக்கு இதுவரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்று குவித்துள்ளனர். இத்தகைய படுகொலைகளுக்கு ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பு இல்லாமல், அரசியல் குழுக்களின் எதிர்ப்பு மட்டுமே இருந்து வந்தது. முதல் முறையாக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பை ஆந்திரா எதிர்கொண்டுள்ளது. எங்களது விசாரணை அடிப்படையில் சில சந்தேகங்களும் சில கோரிக்கைகளும்:
1. 7-ம் தேதி காலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஆந்திர போலீஸார் கூறுகிறார்கள். அன்று மாலை 5 மணிக்கு தமிழக போலீஸார் துப்பாக்கிச் சூட்டினால் இறந்துபோனவர்களின் முழு முகவரிகள், தொலைபேசி எண்கள், புகைப்படங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்குச் சென்று தகவல் கொடுத்துள்ளனர். ஆகவே, இந்த என்கவுன்டர் என்பது 6-ம் தேதி இரவு திட்டமிட்டதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் ஒரு மாத காலமாகத் தமிழகம் மற்றும் ஆந்திர உளவுத் துறையினர் ஏஜென்டின் மூலமாக இத்தகைய தொழிலாளர்களைக் கண்காணித்திருப்பது தெரிய வருகிறது.
2. தொழிலாளர்களின் ஏஜென்டாக செயல்பட்ட வெங்கடேசன், தொழிலாளர்களது வீடுகளுக்குப் போய் சொல்லிவிட்டார் என்பது ஆந்திர போலீஸாருக்குத் தெரிந்துவிட்டது. அவர்களது சித்திரவதை வெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டதால், சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
3. செம்மரங்களை வெட்டுகிற மாபியாக்களும் அரசியல்வாதிகளும் கூட்டாக இருக்கின்றனர். இவர்களைப் பிடிக்கமுடியாத ஆந்திர போலீஸ், அப்பாவிகளைக் கொன்றுவிட்டு ‘சட்டம் ஒழுங்கைச் சரியாக வைத்திருக்கிறோம்’ என்று ஒரு மாயையை ஏற்படுத்த முனைகின்றது. அதற்காக நடந்த கொலை இது.
4. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். நியாயம் கிடைக்கும் என்று நம்பினாலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கடந்தகால பக்கங்களை அலசுகிறபோது உண்மையில் நமக்கு நியாயம் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1,788 போலி மோதல் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளது. இதில் 97 சதவிகிதம் பாதிக்கப்பட்டோருக்கு எதிராகத்தான் தீர்ப்பாகின.
5. இந்த வழக்கினை சிறப்பு விசாரணைக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம், மத்திய புலனாய்வுத் துறை ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து விசாரணை நிறுவனங்களாக இருக்க வேண்டும்.
6. வழக்கை ஆந்திராவில் நடத்தாமல் வேறு மாநிலத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.
-http://www.tamilwin.com