நேபாள நிலநடுக்கத்தினை தொலைக்காட்சி நாடகங்கள் போல இந்திய செய்தியாளர்களும், ஊடகங்களும் படம் பிடிப்பதாக நேபாளிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 6,621 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி 14,023 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200 பேர் வரையில் நேபாளம் எங்கிலும் சென்று செய்தி சேகரித்துவருகின்றனர்.
அவர்கள் இந்தியாவின் உதவிகளையே முன்னிலைப் படுத்துவதாகவும் மற்ற நாடுகளிடமிருந்து நேபாளிகளுக்கு கிடைக்கும் உதவிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேபாளத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற இந்திய ஊடகங்கள் அங்குள்ள மக்களின் மன உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
அதோடு GoHomeIndianMedia என்ற வாசகத்துடன் இந்திய ஊடகங்களை வெளியேற வலியுறுத்தி ட்விட்டரில் ஹேஸ்டேக் விடப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நாளில் #GoHomeIndianMedia ஹேஸ்டேக் கீழ் பதிவான ட்வீட்களின் எண்ணிக்கை 60,000 என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் இந்திய செய்தியாளர்கள் பற்றி வந்த கருத்துக்களில் சில:
இந்திய செய்தியாளர்கள் தொலைக்காட்சி நாடகங்களை படம்பிடிப்பது போல நேபாளத்தில் நிலநடுக்கம் மற்றும் மீட்பு, நிவாரணப் பணிகளில் செய்தி சேகரித்துவருகிறது.
நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட இந்திய ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் பாட்டிலோ ஏன் அவர்களால் கொண்டு செல்லமுடியாது?
பிரபல தொலைக்காட்சி இணையத்தின் வலைஞர்பக்கத்தில் நேபாளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுனிதா சாக்யா தனது பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், உங்கள் ஊடகங்களும், செய்தியாளர்களும் நேபாள நிலநடுக்கச் செய்தியை வழங்குவதை ஏதோ குடும்ப நாடக தொடர்களை படம்பிடிப்பதுபோல் படம் பிடிக்கின்றனர்.
ஒரு செய்தியாளர் காயம்பட்டு கிடக்கும் நபருக்கு உதவாமல் அதையே செய்தியாக வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் மூத்த பத்திரிகையாளர் அஜய் பத்ரா கனால் கூறுகையில், இந்திய ஊடகங்கள் நேபாள நிலநடுக்க மீட்புப் பணியில் இந்திய அரசின் பங்கை மட்டும் உயர்த்திச் சொல்லிக் கொண்டு இருப்பது நேபாள மக்கள் மத்தியில் இந்திய அரசாங்கத்தின் மீதான பார்வையை பாதித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.newindianews.com