தமிழக அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். அவர்களின் உரிமைகளுக்காக போராடும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில்,
முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் மற்றும் அமைச்சரின் உதவியாளர்கள் கொடுத்த தொல்லை தாங்காமல் மன உளைச்சல் காரணமாக செயற்பொறியாளர் எஸ். முத்துக்குமாரசாமி ஓடும் ரயில் முன்பு விழுந்து கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இக்கொடூர சம்பவம் நிகழ்ந்த பிறகு தொடர்ந்து அரசு ஊழியர்களின் தற்கொலை சாவுகளும், தற்கொலை முயற்சிகளும் நடந்து வருவது இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுகிறது.
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இளநிலை வரைவாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன் செயற்பொறியாளர் செந்தில்குமார் கொடுத்த கடும் தொல்லை காரணமாக பணிமாறுதல் பெற்று நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓவர்சீயராக கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வந்தார். பணி மாறுதலுக்குப் பிறகும் செயற்பொறியாளர் செந்தில்குமார் பல்வேறு சட்டவிரோத செயலை செய்யுமாறு நெருக்கடி கொடுத்து வந்தார்.
அங்குள்ள குடோனில் இருந்து தாம் கூறும் அ.தி.மு.க.வினருக்கு நூற்றுக்கணக்கான சிமெண்ட் மூட்டைகளும், டன்டன்னாக இரும்பு கம்பிகளும் வழங்கும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தார். இதற்கு எந்த அத்தாட்சியும் இல்லாமல் வாய்மொழி உத்தரவு அடிப்படையிலே கொடுத்து வந்தார். இத்தகைய சட்டவிரோத செயல்குறித்து எந்த நேரத்தில் என்ன நேரிடுமோ என்கிற பதற்றமும், பயமும் ஏற்பட்டு மனஉளைச்சலுடன் நிம்மயிழந்தவராக கடந்த சில நாட்களாக முத்துகிருஷ்ணன் காணப்பட்டார்.
இந்நிலையில் திடீரென்று நேற்று மாலை 4 மணியளவில் நன்னிலத்தில் தம்மீது பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துகிருஷ்ணன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
38 வயது மட்டுமே நிரம்பிய அரசு அலுவலர் முத்துகிருஷ்ணன் தமது இறுதி மரண வாக்குமூலத்தை முதலில் போலீசாரிடமும், பிறகு திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதாவிடமும் வழங்கினார்.
அந்த வாக்குமூலத்தில் ‘செயற்பொறியாளர் செந்தில்குமார் கொடுத்த தொல்லை காரணமாகவே நான் தற்கொலை செய்து கொண்டேன். எனது சாவுக்கு அவரே காரணம்” என்று கூறியிருந்தார். இந்த அடிப்படையில் செயற்பொறியாளர் முத்துகிருஷ்ணன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவரை பாதுகாக்க ஆளுங்கட்சி அமைச்சரே பின்னாலிருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. அரசு அலுவலரின் தற்கொலைக்கு காரணமான செந்தில்குமார் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
திருவாரூர் கோர நிகழ்வுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் இதைப் போல இன்னொரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் கூட்டுறவு சங்க ரேஷன்கடையில் தொகுப்பு ஊழியராக பணியாற்றிய 46 வயது நிரம்பிய சக்திவேல் 16 தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மருத்துவமனையில் மரண வாக்குமூலம் கொடுக்கும் போது, ‘கோவை மாநகராட்சி 62-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சிங்கை பாலன் கொடுத்த தொல்லை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியில் அமைச்சர்கள், உயரதிகாரிகளின் சட்டவிரோத கடும் நெருக்கடி காரணமாக நாள்தோறும் தற்கொலை செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இனி அமைச்சரோ, அரசு உயர் அதிகாரிகளோ, அ.தி.மு.க.வினரோ எவராவது ஊழல் ஆதாயத்திற்காகவோ, லஞ்ச வேட்டைக்காகவோ சட்டவிரோத செயலை செய்யுமாறு தொல்லை தர முற்பட்டால் அதை உதாசீனப்படுத்தி, புறக்கணிப்பதென தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் உறுதியேற்க வேண்டும். அத்தகைய உறுதி எடுத்து ஊழலுக்கு துணை போக உறுதியுடன் மறுத்த காரணத்தால் எந்த அரசு ஊழியராவது ஆளுங்கட்சியினரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். அவர்களின் உரிமைகளுக்காக போராடும் என்று உறுதியோடு கூற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறியுள்ளார்.
-http://www.nakkheeran.in
காங்கிரஸ் கட்சி என்று தமிழ் நாட்டில் இன்னும் ஒன்று உள்ளதா?.