ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான 3 நேரடி சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக்கோரும் மனுவை மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
திருப்பதி மலையில் செம்மரக் கடத்தலில் ஈடுப்பட்டதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளான, தமிழகத்தைச் சேர்ந்த சேகர், பாலசந்தர், இளங்கோவன் ஆகியோர் மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் பாதுகாப்பில் உள்ளனர்.
இவர்களது சாட்சியத்தை பதிவு செய்து ஆந்திர நீதிமன்றத்துக்கு அனுப்பக் கோரி மதுரை 5- ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மக்கள் கண்காணிப்பக நிறுவனர் ஹென்றி டிபேன் கடந்த ஏப்ரல் 29-இல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனு விவரம்: ஆந்திர நீதிமன்றத்தில் 3 பேரும் சாட்சியம் அளிக்க சென்றால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 164-இன்படி வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க இயலாத நிலை ஏற்பட்டால், வேறு எந்த ஒரு நீதிமன்றத்திலும் அவர்களை ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறலாம் என உள்ளது. அதன்படி, இந்த 3 பேரின் சாட்சியத்தைப் பதிவு செய்து ஆந்திர நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மாஜிஸ்திரேட் எஸ்.என். தனஞ்செயன் முன் கடந்த ஏப்ரல் 29-இல் விசாரணைக்கு வந்தது. விசாரணையை அவர் ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை புலன்விசாரணை செய்யும் அதிகாரிகளுக்குத்தான் சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக்கோரும் அதிகாரம் உள்ளது என 1999-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதி, அதன்படி இந்த மனு விசாரிக்கத் தகுதியானது அல்ல என்றார்.
அப்போது மனுதாரரின் வழக்குரைஞர் சின்னராஜ், சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்களது சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து, சாட்சிகள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை மறுக்கவில்லை. ஒரு அசாதாரண சூழலில் 3 பேரும் உள்ளனர். அதே சமயம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய முடியாது என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-http://www.dinamani.com