சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்தாதது ஏன்? சதானந்த கவுடா பதில்

sadananda-gowda1சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்புகளை எழுதவும், வழக்காடு மொழியாகவும் தமிழை ஏன் பயன்படுத்துவதில்லை? என்றும், ஐகோர்ட்டின் நடவடிக்கைகளில் தமிழுக்கு உரிய மரியாதை எப்போது வழங்கப்படும்? என்றும் டெல்லி மேல்-சபையில் உறுப்பினர் தருண் விஜய் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி சதானந்த கவுடா பேசுகையில் கூறியதாவது:-

அரசியல் சாசன பிரிவு 348(1)ன் படி சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அனைத்து ஐகோர்ட்டுகளிலும் ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக இருக்கும். பிரிவு 348(2) படி மாநிலத்தின் கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை அந்தந்த மாநிலங்களின் ஐகோர்ட்டுகளில் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தும் வகையில் அறிவிக்கலாம். ஆனால் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் ஆங்கிலத்தில் வழங்கப்படும்.

இது குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை குறித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனைக்கு அனுப்பியது. இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த ஆண்டு ஜூலை 4-ந் தேதி தலைமை நீதிபதிக்கு மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை நீதிபதிகளின் பரிசீலனைக்காக முன்வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

-http://www.nakkheeran.in

TAGS: