வானம் பார்த்த பூமியை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்

ramnad_001பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் பழத்தோட்டங்கள் அமைத்து வளமான பூமியாக மாற்றி நல்ல விளைச்சலை கண்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள லாந்தை ஊராட்சியில், அமைந்துள்ளது பஞ்சாப் விவசாயிகளின் அகல் சேவா பழத்தோட்டம்.

மொத்தம் 300 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த பழத்தோட்டத்தில் பஞ்சாபை சேர்ந்த 20 பேர் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயம் செய்கின்றனர்.

மாம்பழம், பலாப்பழம், கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீதா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம்பழம், பப்பாளி என இப்பகுதியில் நன்கு வளரக்கூடிய வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இது தவிர தர்ப்பூசணி, வெள்ளரி எனப் பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர்களையும் வளர்க்கிறோம் என்று 66 வயது சரப்ஜி சிங் தெரிவித்துள்ளார்.

60 வயதான தர்சன் சிங் என்பவர் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்துக்கு நானும், நண்பர் மன்மோகன் சிங்கும் வந்தோம்.

அப்போது இந்த இடம் முழுவதும் கருவேலம் மரங்களாக இருந்தது. அவற்றை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்யவே 3 மாத காலம் ஆனது.

ஆரம்பத்தில் உள்ளூர் கிராம மக்கள், கருவேல மரங்களை அகற்றி விட்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேலி செய்தனர்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மரங்கள் வளர தொடங்கியதுடன், போன வருடம் மாம்பழம் 6 டன், கொய்யா 3 டன், பப்பாளி, பலாப்பழம், முந்திரி ஆகியவை 5 டன் என்று உற்பத்தி செய்தோம்.

பின்பு உள்ளூர் கிராம மக்கள் தங்களோட நிலங்களில் உளுந்து, மிளகாய், கடலைன்னு நம்பிக்கையுடன் விவசாயம் செய்ய தொடங்கினர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பஞ்சாபில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் குறைந்தது ரூ. 20 லட்சத்தில் இருந்து தொடங்கும். ஆனால் இங்கே அதே விலையில் 100 ஏக்கர் நிலம் வாங்க முடியும்.

பழத்தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை கிணறுகள் அமைத்து, அதில் இருந்து சொட்டுநீர் பாசன முறைகளை பயன்படுத்துகிறோம்.

மண்ணில் வறட்சி என்று எதுவும் கிடையாது. பாலைவனமாகவே இருந்தாலும் அங்கேயும் சில தாவரங்களும், மரங்களும் வளரும் என்றும் வறட்சி நம் மனதில்தான் இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: