கர்நாடக வாழ் தமிழர்கள் தமிழ்நாடு திரும்ப வேண்டி வரும்: வாட்டாள் வெறிப் பேச்சு!

vattal-nagarajமேகதாது அணையைக் கட்டவிடாமல் தமிழகம் முரண்டு பிடித்தால், கர்நாடகாவிலுள்ள தமிழர்களை, தமிழ்நாடு திரும்ப அழைத்துக் கொள்ளட்டும் என்று கன்னட சளுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

காவிரிக்கு குறுக்கே மேகதாது (மேக்கேதாட்டு-ஆடு தாண்டும் பாறை) பகுதியில் கர்நாடகா புதிய அணை ஒன்றை கட்டி, பெங்களூரு உள்ளிட்ட தென் கர்நாடக பகுதி மக்களுக்கு குடிநீர் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் தொடங்கிவிட்டன.

ஆனால், காவிரிக்கு குறுக்கே கர்நாடகம் அணை கட்டினால், தண்ணீரை சேமித்து வைத்துக் கொண்டு, தமிழகத்துக்கு தர வேண்டிய பங்கையும் அளிக்காமல் போக வாய்ப்புள்ளதாக கருதி தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், கன்னட போராட்டக்காரர் மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் கட்சி தலைவருமான நாகராஜ் பெங்களூர் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நாகராஜ் கூறியதாவது: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம் தலையிடுவது முட்டாள்தனமானது. காவிரியில் தண்ணீர் தராவிட்டால் தலையிடும் உரிமைதான் தமிழகத்துக்கு உள்ளது.

கர்நாடகா தனது பங்கிலுள்ள தண்ணீரை சேகரித்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முயலும்போது, அண்டை மாநிலம் தலையிடுவது வெட்கக்கேடு.

பெங்களூர் உட்பட தென் கர்நாடக மாவட்டங்களில் கணிசமாக தமிழர்கள் வசிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கும் சேர்த்துதான் மேகதாது அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க உள்ளோம்.

எனவே, மேகதாது அணை வேண்டாம் என்று கூறும் தமிழகம், கர்நாடகாவிலுள்ள தமிழர்களை அவர்கள் மாநிலத்துக்கே திரும்ப அழைத்துக் கொள்ளட்டும். மேலும், காவிரி நீரில் மாசு கலப்பதாக தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி நீரை சுத்தப்படுத்தி தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய வெட்டி வேலை கர்நாடகாவுக்கு கிடையாது. இவ்வாறு வாட்டாள் நாகராஜ் காட்டமாக தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: