காஷ்மீரில் மீண்டும் பரபரப்பு- ஐ.எஸ்., பாக். கொடிகள் பறக்கவிட்டதால் பரபரப்பு!

Kashmir-Mapஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி மற்றும் பாகிஸ்தானின் கொடிகளை ஏந்தி சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் பேரணிகளின் போது பாகிஸ்தான் கொடி ஏந்தி செல்லப்பட்டு வருகிறது. இது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி இது தொடர்பாக மாநில போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கொடியுடன், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரின் கொடியும் ஏந்தி செல்லப்பட்ட சம்பவம் காஷ்மீரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்பேரணியில் தங்கள் முகத்தை மூடியவாறு வந்த 2 இளைஞர்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் கறுப்பு நிற கொடியை தங்கள் கைகளில் ஏந்தி சென்றனர். மேலும் சிலர் பாகிஸ்தான் நாட்டு கொடியையும் ஏந்தியிருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதனால் யாரையும் கைது செய்ய முடியவில்லை.

காஷ்மீரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி ஏந்தி செல்லப்பட்ட சம்பவம் மத்திய-மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

tamil.oneindia.com

TAGS: