பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் உரையாற்றினார்
அப்போது அவர் கடந்த ஜூன் 21 ம் தேதி நடந்த யோகா தினம் பெரும் வரவேற்பை பெற்றது. ராஜ்பாத் யோகாபாத்தாக மாறியது. ஐ.நா., தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது எனக்கு பெரும் மகிழ்வை தந்தது. நாட்டில் 100 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்துள்ளது மிகவும் கவலை அளிக்கிறது.
நாட்டில் பெண் சிசுக் கொலை தடுப்புக்கு மிகப்பெரிய இயக்கம் ஒன்றை தொடங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். குறிப்பாக ஹரியானாவில் பெண்குழந்தைகள் விகிதம் குறைந்துள்ளது. இதனால் பெண் சிசுவின் முக்கியத்துவத்தை உணர்த்த அனைவரும் தங்கள் மகள்களுடன் செல்பி எடுத்து, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். என்றார்.
மேலும் அவர் பேசும் போது அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகள் அவசியம். இவை உருவாக்கப்பட வேண்டும். கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் இல்லாத நிலை உருவாக வேண்டும். அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க அரசு முழுக்கவனம் செலுத்தி வருகிறது. மழை நீர் வீண்ணடிப்பது தடுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்க கூடாது. நாடு இதற்கு விரைவான தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளது. நாடுமுழுவதும் மரங்கள் நடப்பட வேண்டும். நீர் சேமிப்பு மூலம் நீர்வளத்தில் புரட்சி காண வேண்டும்.மகாத்மா காந்தியின் போர்பந்தர் இல்லத்தில் மழைநீர் சேமிப்பு திட்டம் 200 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தப்பட்டுள்ளது. அது இன்னும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
நகர்ப்புற மேம்பாட்டுக்கென 3 பெரும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்தில் நகர்ப்புறம் பெரும் வளர்ச்சி பெறும். நகரங்களில் கழிவு அகற்றம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வரும் 2022 ல் அனைவருக்கும் வீடு திட்டம் நனவாகும். 3 சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கியுள்ளோம். இதில் 10 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
ஜன் சுரக்ஷா யோஜனா திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க கடமைப்பட்டுள்ளோம். ரக்சா பந்தன் ஒட்டி இதனை நாம் உறுதி செய்வோம். என்று கூறினார்.
-http://www.dinamani.com