இந்தூர்: ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது போன்ற விவகாரங்களில் பாஜ கொள்கையில் மாற்றம் இல்லை என மத்திய அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றது முதல் பாஜ மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், இந்துத்துவ தலைவர்கள் ஆகியோர் வகுப்புவாத பிரசாரத்தை தொடர்ந்து செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக மத்திய அமைச்சர்களாக இருப்போர் இந்திய அரசியல் அமைப்பின் மதசார்பற்ற கொள்கைக்கு விரோதமாக பேசி வருகின்றனர் என காங்கிரஸ் காட்டமாக விமர்சித்தது. இதனால் கடந்த முறை நாடாளுமன்ற கூட்டத் தொடரே முடங்கும் அளவுக்கு எதிர்கட்சிகள் அமளியை கிளப்பின. இருந்த போதிலும் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் இது போன்ற பேச்சுகளை பேசுவதை நிறுத்தவில்லை.
தற்போது மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்ற பாஜ இளைஞர் அணியினர் கூட்டத்தில் மத்திய ஸ்டீல் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், இந்து ராஜ்யம் குறித்து கேட்கப்படுகிறது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 125 கோடி இந்திய மக்களுக்கும் சமமான அந்தஸ்தை அளிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. தீண்டாமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கொள்கையை பாஜ கைவிட வில்லை. தற்போது அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பை வரவேற்க காத்திருக்கிறோம்.
அதே போல காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370ஐ நீக்குவது என்ற கொள்கையிலும் பாஜவிடம் எந்த மாற்றமும் கிடையாது. இதற்காக பிடிபி கட்சியோடு எந்த வித ரகசிய ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. பாஜ தற்போது கூட அதை நீக்க விரும்புகிறது. ஆனால் பிடிபி அதை நீடிக்க விரும்புகிறது. எனவே இந்த விவகாரத்தில் இரண்டு கட்சிகளும் மவுனத்தை கடைபிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் நிச்சயம் வழங்கப்படும் என்ற உறுதி சேர்க்கப்பட்டுள்ளது.
அதே போல் கருப்பு பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்குவோர் சிறைச்சாலைகளில் அடைக்கப்படும் நாட்கள் வெகுவிரைவில் வர உள்ளன என்றார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-http://www.dinakaran.com