இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவின் கொல்லைப்புறம் அல்ல! – சீனா தெரிவிப்பு

china_flag_001இந்தியப் பெருங்கடலின் அமைதி, உறுதிப்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகித்தாலும், அதனைத் தனது கொல்லைப்பகுதி என்று உரிமை கொண்டாடுவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஊடகவியலாளர்களிடம், பீஜிங் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  சிறப்பு மூலோபாய நிறுவகத்தின் இணைப் பேராசிரியரான மூத்த கப்டன் சாவோ யி இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“புவியியல் ரீதியாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் தென்னாசிய பிராந்தியத்தின் உறுதிப்பாட்டில், இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், இந்தியப் பெருங்கடலை இந்தியாவின் கொல்லைப்பகுதி என்று கூறுவது பொருத்தமற்றது. அது ஒரு திறந்த கடல் – அனைத்துலக கடற்பரப்பு.

இந்தியப் பெருங்கடல், தனது கொல்லைப்பகுதி என்பது இந்தியத் தரப்பின் கருத்தாக இருந்தால், ஏன் ரஸ்யா, அமெரிக்கா, அவுஸ்ரேலிய கடற்படைகள் சுதந்திரமாக பயணம் செய்கின்றன என்பதற்கு விளக்கமளிக்க முடியாது.

இந்தியப் பெருங்கடல் தனது கொல்லைப்பகுதி என்ற இந்தியாவின் நினைப்பு ஆபத்தானதாக இருக்கக்கூடும்.

ஒரு அமெரிக்க புலமையாளர், இந்தியப் பெருங்கடலில் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக, எச்சரித்துள்ளார்.

அந்தக் கருத்துடன் நான் இணங்கமாட்டேன். ஆனால் சில நாடுகள் இதனைத் தனது கொல்லைப்பகுதி என்று கருதுமானால், அதற்கான சாத்தியங்களை நிராகரிப்பதற்கில்லை.

இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் பிரசன்னமானது, கடல்சார் மற்றும் தொடர்புவழியை பாதுகாப்பதை அடிப்படையாக கொண்டதே தவிர, இந்தியாவைக் குறிவைப்பதற்காக அல்ல.

நாம் நம்பிக்கையை வலுப்படுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.  இந்தியப் பெருங்கடலில் நடமாடுவது குறித்த சந்தேகமும் கவலையும் கொண்டிருந்தால், பரஸ்பரம் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது.

கவலைகளைக் குறைப்பதற்கும், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், பெரும்பாலான நீர்மூழ்கிகளின் நடமாட்டங்கள் தொடர்பான தகவல்களை எமது அயல்நாடுகளுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

இருநாடுகளும் இன்னும் அதிகளம் நம்பிக்கையைக் கட்டியழுப்ப வேண்டும், அதிக வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் மற்றும் அண்மையில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் தரித்து நின்றது தொடர்பாக இந்தியா எழுப்பியுள்ள கரிசனைகளின் பின்னணியிலேயே சீனத் தரப்பில் இருந்து இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: