ராஜிவ் கொலை வழக்கில் 3 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: நீதிபதி கட்ஜூ

markandey-katjuசென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தண்டனை பெற்றவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில், மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட 28 பேருக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் 24 பேருக்கு மரண தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து நளினியின் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால் அந்த கருணை மனு மீது 11 ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாததால் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை அப்போதிருந்த தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. கடந்த பிப்ரவரி 18-ந் தேதி நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தனர்.

இதைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரையும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக சட்டப் பேரவையில் அரசு அறிவித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது பிளாக்கில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார். அவர் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது: கடந்த 24 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளனர்.

ஏற்கனவே, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று ஹைதராபாத் சிறையில் இருந்த அப்துல் காதிர், திகார் சிறையில் இருந்த டி.எஸ்.புல்லர், மகாராஷ்டிராவில் உள்ள எரவாடா சிறையில் இருந்த ஜய்புன்னிஸா காசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டது போல் ராஜிவ் கொலையில் தண்டனை பெற்றவர்களையும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.

ராஜிவ் கொலை செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் என்ன காரணத்திற்காக அவர் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பினார். அதனால்தானே ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். அதுமட்டுமா, இந்திய ராணுவ வீரர்கள் 3 ஆயிரம்பேரையும் நாம் அந்த போரில் இழந்துள்ளோம். ராஜிவின் இந்த செயல் தமிழக மக்கள் மத்தியில் மறையாத வடுவை ஏற்படுத்தியது.

கடந்த 1984-ஆம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபிறகு ராஜிவ்காந்தி, சீக்கியர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி படுகொலைக்கு உத்தரவிட்டார். அப்போது ராஜிவ் கூறும்போது ‘’பெரிய மரம் சாய்ந்தால் நிலத்தில் அதிர்வு ஏற்படத்தான் செய்யும்” என்றார். அவர் செய்ததும் குற்றம்தான். அவரும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்றே கூறலாம்.

எந்த வழக்காக இருந்தாலும் அதில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். ராஜிவ் கொலையில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை அனுபவித்த தண்டனையே போதுமானது. எனவே, அவர்கள் விடுதலையாக வேண்டும்.

இல்லை என்றால் நான் இந்தியா திரும்பியவுடன் தனி அமைப்பை உருவாக்குவேன். அந்த அமைப்பு ‘’புகலிடம் தேடிவரும் நீதிமன்றம்” என்று அழைக்கப்படும். நீதிமன்றம் என்றால் உண்மையான நீதிமன்றம் அல்ல. உண்மைகளை துருவி ஆராய்ந்து அனைவருக்காகவும் நீதியை பாதுகாக்கும் அமைப்பாகும். இவ்வாறு கட்ஜூ கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: