தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பதை பாமகவால் மட்டுமே சாத்தியப்படுத்த இயலும் என்று, அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.தங்கவேல் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் அ.ரவிச்சந்திரன், பி.எம்.கே.பாஸ்கரன், கா.சு.மகேந்திரன், பொ.வை.ஆறுமுகம், பொ.ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
பாமக ஒரு குறுகிய வட்டத்தில் உள்ள கட்சி என்று பிற கட்சியினர் பேசிக் கொள்வது இன்று முடிவு பெற்றுள்ளது. பாமக தமிழகம் முழுவதும் பரந்த கட்சி என்பது இங்கு கூடியிருக்கும் கூட்டம் காட்டியுள்ளது.
இந்தியாவுக்கு எவ்வாறு மும்பையோ அதுபோல தமிழகத்துக்கு கோவை முக்கியமான ஒரு நகரம்.
வேலை வாய்ப்புகளையும், தொழில் வளர்ச்சியையும் உருவாக்கி வந்த கோவையின் தொழில் முதலீட்டாளர்கள் தற்போது வெளிமாநிலங்களைத் தேடிச் செல்கின்றனர். மின்வெட்டால் 60 சதவீதம் சிறுகுறு தொழிற்சாலைகள் இங்கு மூடப்பட்டுள்ளன.
காமராசர் ஆட்சியில் தமிழகத்தில் 12,000 பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் 7,000 மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. ஊருக்கு ஒரு மதுக்கடை உள்ளது. ஆனால் 10 ஊருக்கு மட்டுமே ஒரு பள்ளி உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்பதாகவே இருக்கும். இதை சாத்தியப்படுத்த பாமகவால் மட்டுமே இயலும். எங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால் தேவையற்ற இலவசங்களைக் கொடுக்க மாட்டோம். அதற்குப் பதிலாக தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்போம்.
தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை திராவிடக் கட்சிகளால் வழங்க இயலவில்லை. இருப்பினும் மாறி, மாறி திராவிடக் கட்சிகளுக்கே வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். தமிழகத்தை தரம் உயர்த்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு கொடுத்த நீங்கள், வரும் தேர்தலில் முதன்முறையாக ஒரு படித்த இளைஞனுக்கு, மருத்துவருக்கு, இந்த அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்ல ஆட்சியை எங்களால் கொடுக்க முடியும் என்றார்.
தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் நிறைவுரை ஆற்றினார். முன்னதாக பாமக தலைவர் ஜி.கே.மணி, ஜே.குரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேசினர்.
மாநாட்டுத் தீர்மானம்
தமிழகத்தில் தொழில் துறை, வேளாண் துறை, பொருளாதார வளர்ச்சி இன்று பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்த காரணத்தால், தமிழகம் என்றால் பச்சிளம் குழந்தைகளும் மது அருந்தும் மாநிலம் என்ற அவப்பெயர் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஏமாற்றி வந்துள்ளன. திராவிடக் கட்சிகளிடம் பிணைக் கைதியாக சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டெடுத்து வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்ற, பாமகவை மக்கள் ஆட்சியில் அமர்த்த, 2016-ஆம் ஆண்டில் அரசியல் மாற்றத்துக்கான கொங்கு மண்டல மாநாடு சபதம் ஏற்கிறது என்று, பாமக கொங்கு மண்டல மாநாட்டில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“காமராஜர் ஆட்சி’
கோவை கொங்கு மண்டல மாநாட்டில் விழா பேருரை ஆற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது:
தமிழக அரசியலில் நியாயமான, ஊழலற்ற ஆட்சியை காமராஜர் மட்டுமே வழங்கினார். அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ. 120 மட்டுமே கடைசியாக இருந்தது. ஆனால் அவர் பெரிய அளவில் ஊழல் செய்ததாக திராவிடக் கட்சிகள் அவரையே குறை சொன்னார்கள். காமராஜர் வழங்கிய ஆட்சியை திராவிடக் கட்சிகளால் வழங்க இயலாது. அதுபோன்ற ஒரு ஆட்சியை பாமகவால் மட்டுமே தர முடியும்.
திராவிடக் கட்சிகளால் பூரண மதுவிலக்கு குறித்து வெளிப்படையாக ஏதாவது கருத்து சொல்ல முடியுமா? பெண்களின் ஓட்டுகளுக்காக பூரண மதுவிலக்கு கோரி நாங்கள் போராட்டம் நடத்தவில்லை.
மது ஒழிப்புக்காக கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். மது, புகை ஒழிப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அன்புமணி. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மக்கள் மாற்றத்தைத் தந்தால் நாங்கள் முன்னேற்றத்தைத் தருவோம் என்றார்.
-http://www.dinamani.com
பூரணமது ஒழிப்பு மட்டும் அல்ல, பூர்ணஜாதி ஒழிப்பும் அவசியம் எப்படி உங்கள் ஆட்சியில் சத்தியமா ?கீழ் ஜாதி ,மேல்ஜாதி என்று ஆங்காங்கு வெட்டி சாய்க்கும் கலாச்சாரத்தை ஒழிக்க முடியுமா ?பாகுப்பாடு இன்றி எல்லோரும் தமிழர்கள் தான் என்று ஏற்றுக்கொள்ளும் தன்மை இருந்தால் எல்லாம் சாத்தியமாகும் !திராவிட ஆட்சியில் நடக்கும் இந்த மலிவான் விமர்சனத்திற்கு நீங்கள் ஆட்சிக்கு வந்தால் உத்தரவாதம் உண்டா ?அப்பொழுதுதான் நீங்கள் குறிப்பிடும் சமத்காரம் சம நோக்கோடு உள்ளது என்று ஒப்புக்கொள்ள முடியும் !
ஜாதியை வைத்து அரசியல் நடுத்துபவர்கள் நீங்கள் என்பது தமிழகமே அறியும். பூரண மதுவிலக்கு என்றால் தமிழன் எப்படி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வான்?