காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவைக் காக்கப் போராடுவோம்

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்புச் சலுகைகள், உரிமைகள் அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பு வழக்குத் தொடுக்க முடிவு செய்திருக்கும் நிலையில், அந்த அரசமைப்புச் சட்டப் பிரிவைக் காக்க தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) தீவிரமாகப் போராடும் என்று அக்கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

முன்னதாக, “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் நிரந்தர குடிமக்களுக்கு சிறப்புச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் குடியேறும் மக்களுக்கு சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படுவதில்லை’ என்று தில்லியில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் என்ற அமைப்பு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக, அரசியலைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.
இதுகுறித்து ஒமர் அப்துல்லா தனது வலைதளப்பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கையை தனது கட்சி தீவிரமாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எங்களது கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை எதிர்த்து, தேசிய மாநாட்டுக் கட்சி தீவிரமாகப் போராடும்.

இந்த விவகாரத்தில், ஜம்மு-காஷ்மீரை ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜக கூட்டணி அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் முஃப்தி முகமது சயீது விளக்கம் அளிக்க வேண்டும் என ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம்: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில கல்வி அமைச்சரும், அரசு செய்தித் தொடர்பாளருமான நயீம் அக்தர் கூறுகையில், “இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்போது, இந்த சவாலை மாநில அரசு எதிர்கொள்ளும்; மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருக்கிறது’ என்றார்.

-http://www.dinamani.com

TAGS: