பஞ்சாப் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ

punjab-terror-attacksடெல்லி: பஞ்சாப் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் காவல் நிலையம் அருகே உள்ள காலி கட்டிடத்திற்குள் பதுங்கியுள்ளனர்.

அந்த கட்டிடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் பலியாகியுள்ளார். தீவிரவாதிகள் பாகிஸ்தானின் நாரோவல் பகுதியில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி செய்துள்ளதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் குர்தாஸ்பூர் எஸ்.பி. பல்ஜீத் சிங் பலி

குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் உடையில் வந்த தீவிரவாதிகள் காவல் நிலையம் மற்றும் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதில் 6 பொதுமக்கள் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தினரின் தாக்குதலில் குர்தாஸ்பூர் எஸ்.பி. பல்ஜீத் சிங் பலியாகியுள்ளார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகர் காவல் நிலையம் மற்றும் பேருந்து ஒன்றின் மீது ராணுவ உடையில் இருந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர்.

மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். தீவிரவாதிகள் யாரையும் பிணையக்கைதிகளாக பிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. காவல் நிலையத்தில் 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் 15 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

காலை 5.30 மணிக்கு நடந்த இந்த தாக்குதலால் குர்தாஸ்பூரில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினரை உடனே தினாநகர் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாருக்கு உதவுமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

தீவிரவாதிகள் காவல் நிலையம் அருகே உள்ள காலி கட்டிடத்தில் பதுங்கியுள்ளனர். இந்த தாக்குதலை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே நடந்துள்ளது.

இதற்கிடையே பதன்கோட்-அமிர்தசரஸ் ரயில் பாதையில் 5 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. ராஜ்நாத் சிங் உத்தரவை அடுத்து ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர். பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க ராணுவத்தினர் முயன்று வருகிறார்கள்.

இந்நிலையில் தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு வீரர் காயம் அடைந்தார். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் பலியாகியுள்ளார்.

தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்நிலையில் தீவிரவாதிகள் சுட்டதில் குர்தாஸ்பூர் எஸ்.பி. பல்ஜீத் சிங் பலியாகியுள்ளார்.

இதற்கிடையே ராஜ்நாத் சிங் பஞ்சாப் முதல்வருடன் தொலைபேசியில் பேசி நிலைமை குறித்து விவரம் பெற்றுள்ளார். மேலும் பஞ்சாபில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில் குர்தாஸ்பூரில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன.

http://tamil.oneindia.com

TAGS: