முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு:
அப்துல் கலாம் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு:
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் (83), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார்.
அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ மருத்துவர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
அப்துல் கலாம்:
தனி மனிதனாக, தன் நம்பிக்கையின் ஊற்றாக, பாரதத்தின் அடையாளத்தை உலகுக்கு காட்டிய, இன, மத, பேதங்கள் கடந்து அனைத்து இனத்தவர்களையும், இந்தியன் என்று சொல்ல வைத்த ஒரு உன்னத அடையாளம் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டது.
இவரின் தன்னம்பிக்கையை யாராலும் அடைய முடியாது. இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கும் பெரும் தலைவன். இளைஞர்களால் தான் நாளை இந்தியா வல்லரசாகும் என்று அசையாத நம்பிக்கையை ஏற்படுத்திய ஒப்பற்ற தலைவன்.
தன் வாழ்க்கை காலத்தில் பல இளம் தலைமுறையினரையும், பாடசாலை மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களோடு உரையாடிய முதல் பெரும் தலைவனாக திகழும் அப்துல்கலாம் அவர்கள், அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.
திருக்குறளை தனது வழிகாட்டி நூலாக ஏற்று, அதற்கு ஏற்றால் போல ஒழுகி, அறத்தினூடான வாழ்க்கை, அவ்வறத்தின் பயனாக அறவாட்சியை பாரத நாட்டில் நிலைநாட்ட தேசத்தின் 11வது குடியரசுத் தலைவரானார்.
அரசாங்கப்பள்ளியில் படித்து, அரசாங்கத்தின் தலைவனானவன்.
இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.
இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர்.
பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர்.
எந்த நாடு சென்றாலும் சென்ற நாட்டில் அரச தலைவர்களுக்கு பின்னர் அவர் சந்திப்பது பல்கலைகக்கழக மாணவர்களையும் பாடசாலை சிறுவர்களையுமே.
இளைஞர்களே கனவுகாணுங்கள் என்று இளைய தலைமுறையினரை தட்டியெழுப்பிய அந்த ஒப்பற்ற மனிதன் நீண்ட உறக்கத்தில் இன்று சஞ்சரித்துவிட்டான். நிச்சையம், நிச்சையம், அந்த நீண்ட உறக்கத்தில் அவர் பெரியதொரு கனவு காண்பார்.
நாளை பாரத தேசம் இந்த இளைஞர்களால் வல்லரசு ஆகும் என்று தனது வரலாற்றை வேறு யாரையும் எழுதவிடாமல் தான் உயிரோடு இருக்கும் பொழுதே தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற பெயரில் எழுதி அடுத்தடுத்த தலைமுறைக்கு தன் கைபட பதிவு செய்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
-http://world.lankasri.com
நாட்டுக்கு இழப்பு .தமிழ் தாய்க்கு பேரிழப்பு .
நம் தமிழ் இனதிற்கு பேரிழப்பு , இந்த பிதாமகன் இந்தியாவிற்கு கிடைத்த பெரிய பொக்கிஷ்யம்.. நாடுதான் அவருடைய மூச்சு . மனம் வேதனை அடைகிறது .ஆழ்ந்த அனுதாபங்கள் .
ஓர் இமயம் சரிந்து விட்டது. வானத்தின் எல்லையில் இந்தியம் அழுகின்றது. வையகத்தின் எல்லையில் மனுக்குலம் கண்ணீர் சிந்துகின்றது. ஐயா அப்துல் கலாம் அவர்கள் இனம், மொழி, சமயம், சாதி, சாதி, சடங்கு, சம்பிரதாயம் அனைத்தையும் கடந்து போன ஒரு சாதாரண மனிதர்.
ஆனால், அன்னைத் தமிழகத்திற்கு கிடைத்த ஒரு மந்திரப் புன்னகை. அகில இந்தியாவிற்கு கிடைத்த ஓர் அறிவு ஜீவி.
ஏழ்மை எளிமையில் உச்சத்தைத் தொட்ட அந்த இமயம் மறைந்து விட்டது. மனுக்குல வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
அப்துல் கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில், தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது சர்ச்சைகள் கிளம்பின. அப்படிப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும். அவர்களைத் தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று பல கோணங்களில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப் பட்டன.
இருந்த போதிலும், ஒரே ஒரு மனுவைத் தவிர மற்ற மனுக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். தூக்கு மேடைக்கு அனுப்பாமல் பலரின் உயிர்களைக் காப்பாற்றியும் இருக்கிறார்.
ஒரு குடியரசின் தலைவர், ஒரு பேராசிரியர், ஓர் அறிவியலாளர் என பன் முகங்களை கொண்டு இருந்தாலும் தகைசால் மனிதராக வாழ்ந்து காட்டியவர். அன்பு, கருணை, பாசம், அக்கறை, மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். அன்னாரின் மறைவு இந்தியாவுக்கு மட்டும் அல்ல அகில் உலகத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.