ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகளை பழைய துப்பாக்கிகளுடன் சமாளித்த போலீசார்

punjapகுருதாஸ்பூர்: பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், யாருக்கு தொடர்பு உள்ளது என தெளிவாக இதுவரை தெரியவில்லை. ஆனால், ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகளை, பழைய துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பஞ்சாப் போலீசாரும், சிறப்பு படை போலீசாரும் எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், தாக்குதல் தொடர்ந்தால், தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் இன்று காலை 5.30 மணிக்கு தாக்குதலை துவங்கினர். முதலில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டெம்போ வாகனத்தை கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் காயமடைந்தனர். இதன் பின்னர் மாருதி 800 காரை ஓட்டி வந்த டிரைவரை காயப்படுத்தி விட்டு, டினா நகர் போலீஸ் ஸ்டேசன் சென்று தாக்குதல் நடத்தினர்.

சுமார் 12 மணிநேரத்திற்கும் மேல் பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நீடித்தது. போலீஸ் ஸடேசனுக்குள் புகுந்து கொண்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல்ஜித் சிங் என்ற உயர் போலீஸ் அதிகாரி உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சாலையோரத்தில் உணவகம் நடத்தி வந்தவர் மற்றும் இரண்டு நோயாளிகள் என 3 பொது மக்கள் பலியானார்கள். மாலை 5 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலில் பலியான பல்ஜித் சிங், அந்த மாவட்டத்தில் துப்பறியும் பிரிவுக்கு தலைமை வகித்துள்ளார்.

 பின்னணியில் லஷ்கர்?

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா அல்லது ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பின்னணியில் இருக்கலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை ரயில் தண்டவாளத்தில் 5 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 எச்சரிக்கை:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை விரும்பும் நேரத்தில், இது போன்று எல்லை தாண்டிய தாக்குதல்கள் ஏன் நடைபெறுகிறது என தெரியவில்லை. நாம் முதலில் தாக்கவில்லை. ஆனால் நம்மை தாக்கினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறினார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாளை ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். ரஷ்யாவின் உபா நகரில் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ெஷரீப்பும் சந்தித்து பேசி, தடை பட்டிருந்த இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை துவக்க முடிவு செய்துள்ளநிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

 மத்திய அரசு மீது பழி:

இந்த தாக்குதலுக்கு மத்திய அரசை குற்றம்சாட்டும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பயங்கரவாதிகள் பஞ்சாபில் இருந்து வரவில்லை. அவர்கள் எல்லை தாண்டி வந்துள்ளனர். எல்லையை சீல் வைக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என கூறியுள்ளார்

 அதிநவீன ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள்:

இந்த மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்கள் குறித்த செய்தி வெளிவரத்துவங்கியுள்ளது. பயங்கரவாதிகள் அதிநவீன ஏகே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தனர். ஆனால் பயங்கரவாதிகளை எதிர் கொண்ட பாதுகாப்பு படையினர், எஸ்எல்ஆர் எனப்படும் செல்ப் லோடிங் ரைபில்களை வைத்திருந்தனர். பஞ்சாப் சிறப்பு போலீஸ் படையினருக்கு புல்லப்புரூப் ஜாக்கெட் எதுவும் இல்லை. அவர்களுக்குஹெல்மெட் எதுவும் வழங்கப்படவில்லை. போலீசாருக்கு கையெறி குண்டுகளை சமாளிக்கும் பயிற்சி எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. கையெறி குண்டு வீசப்பட்ட போது, போலீசார் தங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியது டிவி காட்சிகளில் தெரியவந்தது.

 புறக்கணிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள்:

முன்னதாக பயங்கரவாதிகள் தாக்குதலை துவங்கியதும், அதிநவீன பயிற்சி பெற்ற இந்திய ராணுவத்தின் சிறப்பு பாதுகாப்பு படையினர் போலீஸ் ஸ்டேசன் முன்பு அதிநவீன ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனர். ஆனால், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை நாங்களே மேற்கொள்கிறோம் என பஞ்சாப் அரசு கூறிவிட்டது. இதனால், அதிநவீன பயிற்சி பெற்ற அதிகாரிகள், பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக இந்த பணியை உள்ளூர் போலீசார் தான் ஈடுபடுத்தப்படுவர்.

பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதும், தாக்குதல் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு எதிராக உயிரை பணையம் வைத்து போராடும் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி, அவர்களுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

-http://www.dinamalar.com

TAGS: