பாகிஸ்தானில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் தொடர்புடைய அந்நாட்டு குடிமகன் ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் திடுக்கிடும் தகவல்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
உருது மொழியில் இருந்த 32 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று யுஎஸ்ஏ டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா மீது தாக்குதல் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வரப்படுவதாகவும், அமெரிக்கா கூட்டணி வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தாக்க நினைத்தாலும் முஸ்லீம்கள் ஒன்றுப்பட்டு இறுதிகட்ட போர் நடக்கும் என்றும் அந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தை ப்ருக்ளிங் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ப்ரீட் ரீடெல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். தெற்காசிய ஜிஹாதிகளுக்கு இந்தியாவை தாக்குவது தான் குறியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க முயற்சி செய்கிறது. அல் கொய்தாவையும் தங்களுடன் சேருமாறு ஐஎஸ்ஐஎஸ் தெரிவித்துள்ளது. உலக முஸ்லீம்களின் ஒரே தலைவராக ஐஎஸ்ஐஎஸ் தலைவர் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு விரும்புகிறது.
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் செயல்பட்டு வருவதால் நிலைமையை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக வந்த தகவல் உண்மை இல்லை என்று இந்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது.