மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

karuna_vaiko_001மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோ ஆகியோருக்கு என்ன யோக்யதை இருக்கிறது என்று மதுவிலக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நத்தம் விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 4 அண்டுகளாக ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகள் காரணமாக அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல், ‘மதுவிலக்கு’ மூலம் அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முனைந்துள்ளன.

மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை வரையறைக்கு உட்பட்டது. வன்முறை போராட்டங்கள் மூலம் அரசின் கொள்கைகள் நிர்ணயிக்கப்படுவது இல்லை.

இது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். அரசியல் ஆதாயங்களுக்காகத் தான் தற்போது மதுவிலக்கு பற்றி பல்வேறு கட்சிகளும் பேசி வருகின்றன.

சசிபெருமாளின் மரணம் வருத்தத்திற்குரியது, வேதனை அளிக்கிறது, துரதிஷ்டவசமானது என்றாலும், அவர் நடத்திய போராட்டம் காந்திய வழியில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொண்டு, கோபுரத்தின் உச்சில் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்துவது காந்திய வழியாகுமா?

சசிபெருமாளின் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது அருவருக்கத்தக்கதும், கண்டனத்திற்குரியதும் ஆகும்.

தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை 1971ம் ஆண்டு ரத்து செய்த தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது மதுவிலக்கு பற்றி பேசுவது வேடிக்கையானதும், வினோதமானதும் ஆகும்.

‘ஆட்சிக் கட்டில்’ கனவில் உள்ள கருணாநிதி, தான் ஆட்சிக்கு வந்தால் ‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று பூசி மெழுகி, பின்னர் தற்போது முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என 10ம் திகதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சொல்வது அரசியல் ஆதாயம் தேடுவது அல்லாமல் வேறு என்ன?

1971ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி கொட்டும் மழையில், கருணாநிதி இல்லத்திற்கு சென்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொண்ட போதும், அதை எடுத்தெறிந்து மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதிக்கு மதுவிலக்கை பற்றி பேச ஏதேனும் அருகதை உள்ளதா?

புதிய மனு ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் அவருக்கு வேண்டிய இருவர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கிய கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச என்ன யோக்யதை?

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒருபடி மேலே சென்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

தற்போது கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலமான 2009-லிருந்து இதே இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இவ்வளவு காலமாக வாய் திறக்காத வைகோ 2ம் திகதி அன்று போராட்டம் நடத்தியது அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்லாமல் வேறு எதற்காக?

மதுவைப் போன்று புகையிலையும் தீமை விளைவிக்கும் பொருள் தான் என்பது வைகோவுக்கு தெரியுமா? தெரியாதா?

2000ம் ஆண்டிலிருந்து புகையிலைப் பொருட்கள் வாணிபத்தில் ஈடுபட்டு வரும் Tobacco Depot என்ற நிறுவனத்தில் வைகோவின் புதல்வர் ஜி.துரை வையாபுரி பங்குதாரராக உள்ளாரே. இதற்கு வைகோவின் பதில் என்ன?

மதுப்பழக்கம் என்பது ஒரு சமூகப் பிரச்னை. எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள், முகாம்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு அருகே மதுபானக் கடைகள் இருப்பதாக சொல்வது முற்றிலும் தவறானது ஆகும்.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த 504 டாஸ்மாக் கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

தமிழகம் வளர்ச்சிப் பாதையில், முன்னேற்றப் பாதையில், மனிதவள குறியீட்டில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சமயத்தில், அரசுக்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால், மதுவிலக்கு குறித்து போராட்டம் நடத்தி ஜெயலலிதாவின் அரசுக்கு களங்கம் கற்பிக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனக் கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: