இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வந்தாலும், சீனாவுக்கு மாற்றாக உலகப் பொருளாதார உந்துசக்தியாக உயர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
சீனாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் உலகச் சந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தின் மாற்று உந்துசக்தியாக இந்தியா உயர வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ரகுராம் ராஜனின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து பிபிசி செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் கூறியதாவது:
சீனாவின் நிலப்பரப்பில், ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பே இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம், சீனாவை முந்திச் சென்றாலும், அதன் விளைவுகள் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க நீண்ட காலமாகும்.
உலகப் பொருளாதாரத்தில் முக்கியமான நாடாக சீனா திகழ்கிறது. உலகத்தின் எந்தப் பகுதியில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டாலும், அது உலகத்தின் மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்கும்.
கடந்த 2007-08ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைப் போன்று மற்றொரு நெருக்கடியை நாம் எதிர்கொள்வோம் என்று நம்புவதற்கு வலுவான காரணம் இல்லை. எனினும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சீரமைக்கும் பொறுப்பு அந்தந்த நாடுகளின் தலைமை வங்கிகள் மீது சுமத்தப்படுகின்றன. இதனால், எதிர்மறையான சூழல்கள் ஏற்படும் அபாயங்களும் உள்ளன. இந்தியாவில், பணவீக்கம் அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
பொருளாதாரப் பிரச்னைகளுக்கு சீர்திருத்தங்கள் மூலமாகவே தீர்வு காண முடியும். தலைமை வங்கிகளின் அதீத தலையீடுகளால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக, ரிசர்வ் வங்கி கடுமையாக உழைத்து வருகிறது என்று அந்தப் பேட்டியில் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
-http://www.dinamani.com