“மதுரை வீரன் உண்மை வரலாறு’:நூலுக்கான தடையை நீக்க நீதிமன்றத்தை நாட முடிவு

MaduraiVeeranஆதித் தமிழர் பேரவையின் தொழிலாளர் அணி சார்பில் வெளியிடப்பட்ட “மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற நூலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும், ஆளுநரிடம் முறையிடவும் முடிவு செய்திருப்பதாக பேரவையின் நிறுவனர் இரா.அதியமான் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:

மதுரை வீரன் குறித்து கடந்த 2007-ஆம் ஆண்டில் பேராசிரியர் அருணன் 64 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் இல்லாத வரலாற்றுத் தகவல்களை சேகரித்து கடந்த 2013-இல் எழுத்தாளர் ராயப்பன் எழுதிய “மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற நூலுக்கும், செந்தில் மள்ளர் என்பவரின் “வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது’ என்ற நூலுக்கும் தமிழக அரசு அண்மையில் தடை விதித்துள்ளது. இந்த நூல் வெளியாகி 2 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு இப்போது தடை விதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நூலில் தலித் மக்களின் கடவுளாகப் போற்றப்படும் மதுரை வீரனின் வரலாற்றை மட்டுமே கூறியுள்ளோம். நூலின் எந்த ஓர் இடத்திலும் எந்த ஒரு சமுதாயத்தைக் குறித்தும் குறைவாகவோ, தாழ்த்தியோ எழுதவில்லை. ஆய்வு இலக்கியமான மதுரை வீரன் நூலை அதிமுக அரசு தடை செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரானது மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை காட்டுவதாகவும் உள்ளது.

ஏற்கெனவே கடந்த 1956-இல் வெளியான மதுரை வீரன் திரைப்படத்தில் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த மதுரை வீரனை, அரச குடும்பத்து வாரிசாக தவறாக சித்திரித்துள்ளனர். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை வீரன், நாயக்கர் அரசு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்களை அடக்க பயன்படுத்தப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொட்டுக் கட்டி விடப்பட்டிருந்த செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை மீட்பதற்காக கோயிலுக்குள் நுழைய முயன்ற மதுரை வீரனை, உயர் சாதியினர் கை, கால்களை வெட்டி கொலை செய்ததுதான் உண்மையான வரலாறு.

இந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நூலைப் போலவே இதுவும் முகநூல், கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் போன்ற ஊடகங்கள் மூலமாகப் பரவும் வாய்ப்பை அரசே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த நூலின் மீதான தடையை நீக்காவிட்டால் மாநிலம் முழுவதிலும் போராட்டங்கள் நடத்தப்படும். முன்னதாக நூலின் மீதான தடையை நீக்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம். மேலும், மாநில ஆளுநரிடமும் மனு அளிக்க இருப்பதாக அதியமான் கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: