உணவு விடுதியில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் இதுவரையிலும் 80 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவு விடுதியில் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதில் உணவு விடுதியின் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது, அருகில் உள்ள கட்டிடங்களும் சேதமடைந்ததால் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கி கொண்டனர்.
இந்த விபத்தில் இதுவரையிலும் 80 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்ததும் விரைந்து சென்ற அதிகாரிகள், மீட்புபணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் கூறுகையில், சிலிண்டர் வெடித்ததால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது, அருகில் வெடிப்பொருட்கள் இருந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது, எனினும் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், சிலிண்டர் விபத்தில் ஏராளமானோர் பலியானது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்ததனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com