மதுரை: கிரானைட் முறைகேடு பற்றி 20கட்ட விசாரணை நடத்தியுள்ள சகாயம், அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரகாலம் அதாவது அக்டோபர் 15 வரை அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 10 மாத விசாரணையில் 12000 பக்க அறிக்கைகளை தயாரித்துள்ளார் சகாயம். கிரானைட் கொள்ளையோடு நரபலி கொலைகளும் தோண்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கிரானைட் முறைகேடு விசாரணை.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பாக, சட்ட ஆணையரும், தனி அலுவலருமான உ.சகாயம் 2014, டிசம்பர் 3 முதல் விசாரணை மேற்கொண்டுள்ளார். மதுரையில் தங்கி ஆய்வு செய்த சகாயம் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். குவாரிகளில் நேரடியாக கள ஆய்வு செய்தனர்.
இதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கற்கள் வெட்டி எடுத்தது, புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது, புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டது, மலையையே வெட்டி எடுத்தது, நீர்நிலைகளையும் விளைநிலங்களையும் பாழாக்கியது என புதிய முறைகேடுகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. கனிம வளம், பொதுப்பணித் துறை, வேளாண்மை, வருவாய், காவல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து விசாரணை செய்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகவைத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் தமது இறுதி அறிக்கையைத் தயார் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 15ம் தேதி விசாரணை அறிக்கையை சகாயம் தாக்கல் செய்யப்போவதாகக் தகவல் பரவியதும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு போன் செய்த ஒருவர், ‘சகாயம் சேகரித்து வைத்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் கொளுத்திவிடுவோம்; அவருடைய விசாரணை எங்களை ஒன்றும் செய்துவிடாது’ என்று பேசியுள்ளார். இந்தத் தகவலை காவல் துறையினர் சகாயத்திடம் தெரிவித்து அவருடைய அலுவலகத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளித்தனர். இதுபோல் வழக்குகள் நடந்துவரும் மேலூர் கோர்ட்டுக்கும் மிரட்டல் போன் வந்ததால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் இதுவரை மிரட்டல் விடுத்த ஆசாமியை கண்டுபிடிக்கவில்லை.
-http://tamil.oneindia.com
மிரட்டல் விடும் ஆசாமியை எப்படிக் கண்டுப் பிடிப்பார்கள் அங்குதான் வேலியே பயரை மேய்கிறதே !