விமான விபத்தில் இறந்ததாக தவறான தகவல் பரப்புவோர் மேல் நடவடிக்கை- நேதாஜி உறவினர் சந்திர போஸ்

netaji-subhas-chandra-bose-டெல்லி: விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினரான சந்திர போஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது வானொலி உரையில், சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை சந்திக்க உள்ள தகவலை வெளியிட்டதை அடுத்து, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திர போஸ் இதனைத் தெரிவித்தார்.

மேலும், சுபாஷ் சந்திர போஸ் குறித்த 64 ரகசிய கோப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசும் தன்னிடம் உள்ள 150 ரகசிய கோப்புகளை வெளியிட வேண்டும் என பிரதமரை அவர் கேட்டுக்கொண்டார்.

அதோடு சுபாஷ் சந்திர போஸ் குறித்த உண்மையைக் கண்டறிய உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சந்திர போஸ் இக்குழு உள்நாட்டு ரகசிய ஆவணங்களை ஆய்வு செய்வதோடு ரஷ்யா, பிரிட்டன், சைனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களையும் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் மட்டுமே உண்மையைக் கண்டறிய முடியும் என்றும் சந்திர போஸ் தெரிவித்துள்ளார். அதோடு 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், இனியும் அவ்வாறு கூறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: