‘தலித்’ டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக் கோரி திருச்செங்கோடு தொகுதி முன்னாள் எம்.பி.யும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிகள் தங்களது சண்டைக்காக நீதிமன்றத்தை போர்க்களமாக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓமலூரைச் சேர்ந்த தலித் பொறியாளர் கோகுல்ராஜ் திருச்செங்கோட்டைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். Vishnupriya suicide: DMK நாமக்கல் மாவட்டத்தில் ஜாதி மறுப்பு மற்றும் காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வரும் யுவராஜ் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். கோகுல்ராஜூம் அவர் காதலித்த பெண்ணும் திருச்செங்கோடு கோவிலுக்கு சென்றிருந்த போது யுவராஜின் அடியாட்கள் கோகுல்ராஜை கடத்தி சென்றனர்.
இதன் பின்னர் அவரது கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து கோகுல்ராஜ் கடத்தப்பட்ட தகவலை நண்பர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் அந்த பெண்ணே தெரிவித்தார். இதனடிப்படையில் தேடப்பட்டபோது கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தற்கொலை அல்ல; யுவராஜ் கும்பலின் படுகொலைதான் என்று கோகுல்ராஜின் பெற்றோரும் பல்வேறு இயக்கத்தினரும் போராடியதைத் தொடர்ந்து இது படுகொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தாம் தேடப்படுவதை தெரிந்து கொண்ட யுவராஜ் தலைமறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்தவர் தலித் பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா. ஆனால் அவரது உயரதிகாரிகள் யுவராஜைத் தப்பவைக்கும் நோக்கத்தில் போலி குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களை குண்டர்சட்டத்தில் அடைத்தாக வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர்.
ஆனாலும் வாட்ஸ் அப் மூலம் தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்களிடம் யுவராஜ் பேசி வருகிறார். அவரை கைது செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நெருக்கடியின் உச்சத்தால் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தை உலுக்கியுள்ளது.
தற்போது இந்த இரு வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விஷ்ணுபிரியாவின் பெற்றோரும் இரு வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இக்கோரிக்கையை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று நிராகரித்துவிட்டார்.
இதனிடையே தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்செங்கோடு தொகுதி முன்னாள் எம்.பி. என்ற அடிப்படையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரி தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோருக்கு மனு கொடுத்திருந்தார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகள் தங்களது சண்டைக்காக நீதிமன்றத்தைப் போர்க்களமாக்குவதை அனுமதிக்க முடியாது; பாதிக்கப்பட்டிருந்தவர்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தால் இந்த கோரிக்கையை பரிசீலிக்கலாம் என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தங்களது மனுவை திரும்பப் பெறுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தரப்பு தெரிவித்தது. இதனால் அவரது மனுவை தலைமை நீதிபதி கவுல் டிஸ்மிஸ் செய்தார்.