மோடி இந்தியாவை மட்டுமல்ல உலகையே மாற்றுவார்: சிஸ்கோ தலைவர் ஜான் தாமஸ் பேச்சு

ciscomodiசிலிக்கான்வேலி: மோடி இந்தியாவை மட்டுமல்ல உலகையும் மாற்றுவார் என்று சிஸ்கோ நிறுவன செயல் தலைவர் ஜான் தாமஸ் சேம்பர்ஸ் தெரிவித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சனிக்கிழமை இரவு, நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-4 நாடுகள் மாநாட்டில் பங்கேற்றார். 10 வருடங்களுக்கு பிறகு இம்மாநாட்டை இந்தியா நடத்தியது.

பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவற்றை உறுப்பு நாடாக கொண்ட ஜி-4 அமைப்பின் மாநாட்டில், இந்தியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் தர வேண்டும் என்று மோடி வலியுறுத்தி பேசினார்.

இதையடுத்து நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம், அமெரிக்காவின் மேற்குகடற்கரை பகுதிக்கு விரைந்தார். சிலிக்கான்வேலியில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை மோடி சுற்றி பார்த்து, விவரங்கள் கேட்டறிந்தார். இதையடுத்து, இந்திய நேரப்படி காலை 6 மணிக்கெல்லாம், ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக்கை சந்தித்தார் மோடி. 15 நிமிடங்கள், நடந்த இந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கு தொழில் தொடங்க வருமாறு மோடி அழைப்புவிடுத்தார்.

இதன்பிறகு மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதல்லாவை மோடி சந்தித்தார். பின்னர் டிஜிட்டல் இந்தியா மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார். அதில் கூகுள் சிஇஓ, சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ, சத்யா நாதல்லா, அடோப் நிறுன சிஇஓ நாராயண், சிஸ்கோ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

சிஸ்கோ செயல் தலைவர் ஜான் தாமஸ் சேம்பர்ஸ் மாநாட்டில் பேசியது:

மோடிக்கு உலக டிரெண்ட் நன்கு தெரிகிறது. அவர் ஒரு தைரியமான தலைவராக உள்ளார். உலக தலைவர்களில் டாப்-5 தலைவர்களில் ஒருவராக மோடிக்கு நான் இடம் தருவேன். அவர் இந்தியாவை மட்டுமல்ல உலகையே மாற்றுவார். இந்தியாவின் சிறந்த தூதுவராக மோடி விளங்குகிறார். இந்தியாவில் தொழில்தொடங்க நிலவும் பல்வேறு தடங்கல்களை நீக்கினால், தொழில்வளம் பெருக வாய்ப்புள்ளது. அதை செய்யும் அளவுக்கு மோடி திறமையானவர். இவ்வாறு அவர் பேசினார்.

tamil.oneindia.com

TAGS: