பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது செயல்திட்டத்தை, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.
இதில், தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின், மாசு வெளியேற்ற அளவு 2030-க்குள் 33 முதல் 35 சதவீதம் வரை குறைக்கப்படும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. மாசு இல்லாத எரிசக்தியின் அளவை 40 சதவீதம் உயர்த்துவது எனவும், இந்த இலக்கை அடைய வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்றுவரும் பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டில், காந்தி ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை இந்தச் செயல்திட்டத்தை இந்தியா சமர்ப்பித்தது.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இந்தியாவில், அடுத்த 15 ஆண்டுகளுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தின் தீவிரம், 2005ஆம் ஆண்டு அளவைவிட 33 முதல் 35 சதவீதம் வரை குறைக்கப்படும்.
காடுகளின் பரப்பளவை அதிகரிப்பதன் மூலம், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 250 முதல் 300 கோடி டன்கள் அளவுக்கு கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, உலகிலேயே மிகப்பெரிய அளவிலான எரிசக்தி நிறுவுதிறன் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில், 175 கிகா வாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடக, மகர ரேகைப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளுடன் கூட்டு சேர்ந்து, சூரிய மின்சக்தி தொடர்பான கொள்கை மற்றும் பயன்பாட்டுக்கான சர்வதேச அமைப்பை நிறுவ இந்தியா முடிவு செய்துள்ளது.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் காற்றாலை மின்னுற்பத்தியை 60 கிகா வாட் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சூரிய சக்தி மின்னுற்பத்தியை 100 கிகா வாட் அளவுக்கு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சாண எரிவாயு மூலமான மின்னுற்பத்தி, தற்போது 4.4 கிகா வாட்டாக உள்ளது. அதை, அடுத்த 7 ஆண்டுகளுக்குள் 10 கிகா வாட்டாக அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நீர் மின் உற்பத்தியையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எரிபொருளுக்கான மானியங்களைக் குறைத்தது, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தியது உள்ளிட்டவை அவற்றுள் அடங்கும்.
மானியங்களைச் சீரமைப்பதன் ஒரு பகுதியாக, சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மானியத்தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும், பெட்ரோல் மீதான மானியம் 26 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலமாக, அடுத்த ஓராண்டுக்குள் 1.1 கோடி டன்கள் அளவுக்கு கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கரியமில வாயு வெளியேற்றக் குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரத் துறைகள் மற்றும் நமது சமுதாய பிரிவுகளைப் பாதுகாப்பதில் உறுதியாகச் செயல்படப் போவதாகவும் இந்தியா அந்தச் செயல்திட்டத்தில் தெரிவித்துள்ளது.
பாரீஸ் மாநாடு: பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு சார்பில் பாரீஸ் நகரில் வருகிற நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை மாநாடு நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 196 நாடுகள் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் தங்களது செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படி, இந்தியா உள்பட 148 நாடுகள் தங்களது செயல்திட்டத்தை இதுவரை சமர்ப்பித்துள்ளன.
இந்தச் செயல்திட்டங்களின் அடிப்படையில் பாரீஸ் மாநாட்டில் விவாதம் நடத்தப்பட்டு, உலகளாவிய பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்திற்கான இலக்கு நிர்ணயிக்கப்படும்.
-ww.dinamani.com


























