இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டியது அவசியம் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன்.
நாகூரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 44-ஆவது ஷரத்தை நீக்கக் கோரி நாடு முழுவதும் 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டு, அவை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்படும்.
சட்டரீதியாக மதசார்பற்ற ஆட்சியை மத்திய அரசு வழங்க வேண்டும். அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தொடக்கத்திலேயே கண்டறிந்து, தடுக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இல்லாவிடில் அவை தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும்.
வடநாட்டில் மாட்டு இறைச்சியை சாப்பிட்ட முஸ்லிம் நபர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் வரும் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் நடைபயணத்துக்கு மக்கள் தரும் வரவேற்பு, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை சுட்டிக் காட்டுகிறது. புழல் சிறையில் முஸ்லிம் கைதிகள், சிறை காவலர்களை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என்றார்.
-http://www.dinamani.com