ஐ.நா.வில் இந்தியா மீது நேபாளம் புகார்

nepal bordarஎல்லை வர்த்தகம் மேற்கொள்ளும் பகுதியில் இந்தியா தடையை ஏற்படுத்தியுள்ளதால், அத்தியாவசியப் பொருள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.சபையில் நேபாளம் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து நேபாள அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

நேபாளத்தின் துணைப் பிரதமர் பிரகாஷ் மான் சிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனை சனிக்கிழமை சந்தித்து, எல்லையில் வர்த்தகம் மேற்கொள்ளும் பகுதியில் இந்தியா தடையை ஏற்படுத்துவது குறித்து புகார் தெரிவித்தனர்.

அப்போது, இந்தத் தடை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து பான் கீ மூன், தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பேசிய பிரகாஷ் மான் சிங், நேபாளம் போன்ற நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடுகள், கடல் பகுதிகளுக்கு எளிதாகச் சென்று வருவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், அந்நாட்டில் புதிதாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள புதிய அரசமைப்புச் சட்டத்தின் மீது இந்தியாவுக்கு அதிருப்தி உள்ளதால், எல்லை வழி வர்த்தகத்தில் பிரச்னைகளை எழுப்புவதாகவும், அதன் காரணமாக நேபாளத்தில் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எனினும், நேபாளத்தின் புகாருக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேபாளத்தில பிரகடனம் செய்யப்பட்டுள்ள புதிய அரசமைப்புச் சட்டத்தை ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூன் வரவேற்றுள்ளதாக ஐ.நா. அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: