கேரளாவில் “ஈழவா” சமூக கட்சியுடன் கை கோர்க்க தயார்… நம்பூதிரி பிராமணர்கள் அறிவிப்பு

kerala-map1-600கொச்சி: கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் துணையுடன் ஈழவா சமூகத்தின் வெள்ளாப்பள்ளி நடேசன் ஆரம்பிக்கும் கட்சியை ஆதரிக்க தயார் என்று கேரள நம்பூதிரி பிராமணர்கள் சங்கமான யோகக்ஷேம சபா அறிவித்துள்ளது.

கேரளாவில் 25% உள்ள பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவராக இருப்பவர் வெள்ளாப்பள்ளி நடேசன். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து தாம் ஒரு புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் உள்ளாட்சித் தேர்தலில் அது பா.ஜ.க.வுடன் இணைந்து 3வது அணியாக தேர்தலை சந்திக்கும் எனவும் அறிவித்தார். கேரளா அரசியலில் இது பெரும் புயலைக் கிளப்பியது. குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளை இது அலறவைத்தது.

ஈழவா சமூகத்தில் பெரும்பகுதியானோர் இடதுசாரி ஆதரவாளர்கள். ஆகையால் இது இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் வெள்ளாப்பள்ளி நடேசனுக்கு எதிரான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை இடதுசாரிகள் முன்வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் கேரளாவில் எப்படியாவது கால்பதித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பா.ஜ.க. ஈழவா சமூகத்தினரைப் போல இதர இந்து அமைப்புகளையும் ஒரு அணியில் திரட்டுகிற வேலையில் மும்முரமாக இருக்கிறது.

இந்த நிலையில் வெள்ளாப்பள்ளி நடேசனின் புதிய கட்சியை ஆதரிக்கப் போவதாக கேரளா நம்பூதிரி பிராமணர்களின் சங்கமான யோகக்ஷேம சபா அறிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈழவா சமூகத்தினர் வீதிகளில் நடமாடக் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் போராடி சிறைசென்றதால் ‘வைக்கம் வீரர்’ என பாராட்டு பெற்றார்.

தற்போது ஈழவா சமூகத்தை ஒதுக்கி வைத்த நம்பூதி பிராமணர்கள் போன்ற முற்படுத்தப்பட்ட ஜாதியினரும் அவர்களுடன் அரசியல் ரீதியாக கைகோர்க்க தொடங்கியிருப்பது பா.ஜ.க.வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நம்பூதிரி பிராமணர்கள் சங்கத்தின் தலைவரான பட்டாதிரிபாட் ஊறுகையில், கேரளாவின் இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் நாங்களும் ஒரு அங்கமாக இருக்கிறோம். வெள்ளாப்பள்ளி நடேசனின் அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியை ஆதரிக்கிறோம்.

பல்வேறு இந்து அமைப்புகள் நவம்பர் 23-ந் தேதியன்று காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை நடத்தும் ரத யாத்திரையில் நாங்களும் பங்கேற்போம் என்றார்.

கேரளாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் வலுவாக இருக்கின்றன. இதனால் இதுவரை பா.ஜ.க.வால் இம்மாநிலத்தில் நுழைய முடியாத நிலை இருந்தது.

இதனால் இந்து சமூக இயக்கங்களை ஒன்றிணைத்து அதன் மூலம் எப்படியும் கேரளாவுக்குள் நுழைந்துவிடுவது என்ற பா.ஜ.க.வின் முயற்சிக்கு ஈழவா, நம்பூதி பிராமணர்கள் அமைப்புகள் கைகொடுத்திருப்பது நம்பிக்கையை விதைத்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: