மூணாறு: கேரளாவின் மூணாறில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ப் பெண் தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று மூணாறில் சாலைமறியலில் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மூணாறு கண்ணன் தேவன் ஹில்ஸ் ப்ளான்டேஷன்ஸ் கம்பெனிக்கு சொந்தமான டீ எஸ்டேட்டில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்கள் தோட்ட தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த எஸ்டேட்டில் எண்ணற்ற தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்த தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் தாங்களாகவே போராட்ட களத்துக்கு வந்தனர்.
இது அத்தனை தொழிற்சங்கங்களையும் அலறவைத்தது. தங்களுக்கான ஒரு நாள் கூலியை ரூ232-ல் இருந்து ரூ500ஆக உயர்த்த வேண்டும் என்பது தொழிலாளர் கோரிக்கை. ஆனால் நிர்வாகமோ ரூ25தான் கூடுதலாக தர முடியும் என்கிறது. தற்போது “பெண்கள் ஒற்றுமை” என்ற பெயரில் தமிழ்ப் பெண் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழக, கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து அந்த சங்கத்துக்கு ரூ1 லட்சம் நன்கொடையும் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் பெண் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக கண்ணன்தேவன் நிறுவனத்துடன் தொழிலாளர் நலன் கமிட்டி நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக “பெண்கள் ஒற்றுமை” அமைப்பு அறிவித்துள்ளது. கொச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணிவரை இந்த சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
அவர்கள் போராட்டம் வெற்றிபெற வேண்டுகிறேன் !தமிழர்கள் இப்படி உலகம் முழுவதும் கூலிக்கு மாரடிக்கும் நிலை மாறவேண்டும் .இதற்கு தமிழனின் ஒற்றுமையும் கூட்டு முயர்ச்சியும் தேவை