இடஒதுக்கீடு முறை தொடர்வது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்தார்.
இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சில காலத்துக்கு இடஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது அதைக் கையில் எடுத்து, இந்த விவகாரத்தைச் சிக்கலாக்கி விட்டன. எனவே, நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இடஒதுக்கீடு இருக்கிறது.
தேர்தல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து வேட்பாளர்களின் சின்னங்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இது அரசியல்சாசன ரீதியிலான ஏற்பாடு அல்ல. இந்த விஷயத்தில் எங்களுடைய போராட்டம் அரசுடன் அல்ல. மாறாக, தேர்தல் ஆணையத்துடனானது. அதை இங்கிருந்து தொடங்குகிறேன்.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கட்சிகளால் ஊழலை ஒழிக்க இயலாது. இந்த விஷயத்தில் தங்கள் வாக்கின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய சக்தி வாக்காளர்களிடம்தான் உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் ஊழல் விவகாரத்தை பாஜக எழுப்பியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழலை ஒழிப்பதற்கு அக்கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. லோக்பால் மசோதாவால் மட்டுமே 50 சதவீத ஊழலைக் கட்டுப்படுத்த முடியும்.
மாட்டிறைச்சி விவகாரத்தை அரசியல் கட்சிகள் இப்போது எழுப்புவது ஏன்? நாடு சுதந்திரம் பெற்ற கடந்த 68 ஆண்டுகளாக கட்சிகள் மாட்டிறைச்சியைக் கண்டதே இல்லையா? இவை அனைத்தும் அரசியல்தான் என்றார் ஹசாரே.
-http://www.dinamani.com