டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி வழங்கப்படாது: அரசு அரசாணை வெளியீடு

agriculture-formerசென்னை: டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில். மீத்தேன் வாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய, தமிழக அரசால் தனிக் குழு அமைக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 691 சதுர கி.மீ. பரப்பில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனம் உத்தேசித்த நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்நீர் உட்புகுதல், வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் விளைவு, மாசற்ற எரிசக்தி வளங்களை மேம்படுத்துதலின் தேவை ஆகியவை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரின் தலைமையின் கீழ், தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிடம் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதன்படி, தொழில்நுட்ப வல்லுநர் குழு தனது அறிக்கையைப் பரிந்துரைகளுடன் அரசுக்கு அளித்தது. இதை அரசு கவனமாகப் பரிசீலித்தப் பிறகு, தொழில்நுட்ப வல்லுநர் பரிந்துரைகளை ஏற்று இத்திட்டத்துக்குத் தமிழக அரசால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படாது என முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகைப் பகுதியில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்தவிதமான முயற்சியையும் தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரோட்டம் தொடர்பான தகவல்கள், நுண்தனிமங்கள் தொடர்பான தரவுகள், நிலத்தடிநீரின் ஐசோடோப் கூறுகள், பழுப்பு நிலக்கரி படுகை தொடர்பான தரவுகள், நிலத்தடி, நீர்படுகை ஊடாக மீத்தேன் வாயு கசிவதற்கான சாத்தியங்கள் போன்ற மிக முக்கியமான தகவல்கள் இந்த நிறுவனத்தால் அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்த நிறுவனம் மிகப் பெருமளவிலான நிலத்தடிநீரை வெளியேற்ற மற்றும் அதனால் படுகையில் ஏற்படும் விளைவுகளுக்கு உரிய அரசு அமைப்புகளான மத்திய நிலத்தடிநீர் ஆணையம், தமிழ்நாடு பொதுப் பணித் துறையினரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று அளிக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்டத்தின் பிரிவு இந்தப் பகுதியில் நிலத்தடிநீர் எடுப்பதால் உண்டாகும் நில அமைப்பியல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நிலத்தட்டுகளின் இடப்பெயர்வு நடைபெறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. நிலக்கரி படுகை மீத்தேன் கிணறுகள் மற்றும் வாயு அழுத்தக் கலன்கள் மூலமாக மீத்தேன் வாயு கசிவு மற்றும் காற்று மாசுகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

விஷ வாயு வெளியேற்றம் அப்பகுதியில் வளி மண்டல வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்தி மழை அளவு குறைவதற்கும் வாய்ப்புண்டு. மீத்தேன் வாயு எடுக்கப்பட்ட பிறகு இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிணறுகளைத் தூர்க்கவோ அல்லது மீண்டும் பயன்படுத்தவோ இயலாது. இப்பகுதியில் வாயு கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் வாயு கசிவு, அதனால் ஏற்படும் பெருவெடிப்பு இப்பகுதியில் உள்ள மக்களின் உயிர், உடைமை, சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்பன உள்ளிட்ட காரணங்களைத் தொழில்நுட்ப வல்லுநர் குழுத் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விவசாய தொழில் தான் அடிப்படையானது.

அதில் 1000 எக்டேர் விவசாய விலை நிலங்கள் இந்த திட்டத்தால் தண்ணீர் இன்றி பாதிக்கப்படும். குடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும். மீத்தேன் வாயுவை எடுக்கும் போது வெளிப்படும் நீர் அதிக உப்பும், காரத் தன்மையும் உள்ள கடின நீராகும். இது பூமி பரப்பின் மேல் பகுதியில் படர்ந்து மண்ணின் விளைச்சல் தன்மையை பாதிக்கும்.

மேலும் மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். இது தவிர குடிநீராக பயன்படுத்தப்பட்டு வரும் நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரிப் படுகைப் பகுதியில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படமாட்டாது எனத் தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: